நானும் எனது நூலகங்களும்
எ ன்னுடைய முதல் நூலகம் எங்கள் வீடு தான் . நான் சிறுமியாக இருந்த காலங்களில் அம்மா தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பெரிய பெரிய தடித்த மட்டைகள் போட்ட புத்தகங்களை தன் மடியில் வைத்து வாசித்துக்கொண்டிருப்பார் . அவற்றின் முன்பக்க அட்டைகளில் அழகான வர்ண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும் . அம்மா அந்தப் புத்தகங்களில் தன் முழுப்புலனையும் செலுத்தி வாசித்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி அவதானிக்கத் தொடங்கியிருந்தேன் . அம்மா புத்தகங்களை வாசிக்கும் போது நாங்கள் அவரை அழைத்தாலும் எம் குரலுக்கு செவி சாய்ப்பதற்கு அம்மாவுக்குச் சில நிமிடங்கள் பிடிக்கும் . இந்தத் தாமதம் தான் அம்மாவின் புத்தக வாசிப்புத் தொடர்பாக எனக்குள் பல கேள்விகளைப் பிறப்பிக்கத் தொடங்கியிருந்தது . சிறுவர்களான எங்களது அழைப்புக்கு உடனடியாக செவிசாய்ப்பதை விட , முக்கியமானதாக அல்லது விருப்பமானதாக அந்தப் புத்தகம் அம்மாவுக்கு இருக்க...