நானும் எனது நூலகங்களும்

        ன்னுடைய முதல் நூலகம் எங்கள் வீடு தான்

        நான் சிறுமியாக இருந்த காலங்களில் அம்மா தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பெரிய பெரிய தடித்த மட்டைகள் போட்ட புத்தகங்களை தன் மடியில் வைத்து வாசித்துக்கொண்டிருப்பார்.  அவற்றின் முன்பக்க அட்டைகளில் அழகான வர்ண ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.  அம்மா அந்தப் புத்தகங்களில் தன் முழுப்புலனையும் செலுத்தி வாசித்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி அவதானிக்கத் தொடங்கியிருந்தேன்.

         அம்மா புத்தகங்களை வாசிக்கும் போது நாங்கள் அவரை அழைத்தாலும் எம் குரலுக்கு செவிசாய்ப்பதற்கு அம்மாவுக்குச் சில நிமிடங்கள் பிடிக்கும்இந்தத் தாமதம் தான் அம்மாவின் புத்தக வாசிப்புத் தொடர்பாக எனக்குள் பல கேள்விகளைப் பிறப்பிக்கத் தொடங்கியிருந்ததுசிறுவர்களான எங்களது அழைப்புக்கு உடனடியாக செவிசாய்ப்பதை விட, முக்கியமானதாக அல்லது விருப்பமானதாக அந்தப் புத்தகம் அம்மாவுக்கு இருக்கிறதே என்ற ஆதங்கம் தான் அவரின் வாசிப்புத் தொடர்பான எனது அவதானிப்புகள் வலுப்பெறுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது.

       அம்மா அப்போது கல்கியில் தொடராக வரும்; நாவல்களைச் சேர்த்து, தொகுத்துக் கட்டப்பட்டிருக்கும் கனதியான நூல்களைத்  தான் அநேகமாக வாசித்துக்கொண்டிருப்பார்அவை தவிர சாண்டில்யனின் சரித்திர நாவல்களும் அம்மாவின் கைகளில் எப்போதும் புரண்டுகொண்டிருக்கும். அம்மா அவற்றை வாசித்த குறையில் அவசரமாக மேசை மீது அல்லது விறாந்தாவின் விளிம்பில் அல்லது தலையணையருகில் விட்டுவிட்டு அலுவலாக செல்லும் போது அவற்றை நான் விரித்து வைத்துக்கொண்டு, அம்மாவின் புலனனைத்தையும் இழுத்து வைத்திருக்கும் மர்ம மந்திரம் என்னதான் அதற்குள் இருக்கிறதென அவற்றின் பக்கங்களை அங்குமிங்கும் புரட்டிப்புரட்டிப் பார்த்து ஆராய்ந்திருக்கிறேன்.

        பின்னர் அந்த நாவலைப்பற்றி அம்மாவிடம் பல கேள்விகள் கேட்டு விசாரித்திருக்கிறேன். அதனை முழுமையாக விபரிப்பதற்கு அம்மாவுக்கு நேரமிருப்பதில்லையானாலும் அதுபற்றி மேலோட்டமான ஒரு விபரிப்பை அச்சமயங்களில் எனக்குத் தந்திருக்கிறார்பின்னர் எனக்கொரு ஒன்பது பத்து வயது ஆகிற காலங்களில் எனது பெரியமாமா - பாலசுப்ரமணியம் அவர்களின் வீட்டுக்குப் போய் அங்கிருந்து தனக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்று வருமாறு அம்மா என்னை அனுப்பி வைப்பார்பெரியமாமா- பாலசுப்பிரமணியம் அவர்களும், பெரியமாமி- ராஜேஸ்வரி அவர்களும் வாசிப்பில் மிகுந்த ஆர்வமுள்ளவர்கள். அவர்கள் அந்த நாட்களில் (எழுபதுகளின் ஆரம்பகாலம்) பத்திரிகைகள் சஞ்சிகைகளில் வரும் நல்ல நாவல்களை தொகுத்துப் புத்தகங்களாக்கி, அவற்றிற்கு அழகான தடித்த அட்டைகள் போட்டுக் கட்டி கனமான புத்தகங்களாக்கி வைத்திருப்பார்கள். ஒவ்வொரு புத்தகங்களும் பல பாகங்களைக் கொண்டனவாகவும் 400, 500 பக்கங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும்.

      அம்மா வாசித்து முடித்த புத்தகங்களை நான் திருப்பிக் கொடுக்கப் போகும் போது அம்மா சொல்லியனுப்பும் வேறு நாவல்கள் இரண்டை அவர்களிடமிருந்து வாங்கி வந்து அம்மாவிடம் கொடுப்பேன்இந்தக் கொடுக்கல் வாங்கல்களுக்கு உதவும் ஒரு குட்டிப்பாலம் போல நான் பல வருடங்கள் இருந்திருக்கிறேன்.   

       புத்தகங்களை வாங்கிவரும் போது நடைபாதையில் ஆங்காங்கே நின்று அவற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தவாறு மெதுவாக நடப்பேன்.  வர்ணப் படங்களுடன் கூடிய பக்கங்களிலிருக்கும் சிறிய பந்திகளை ஆங்காங்கே நின்று வாசிப்பேன்.  இடையில் சொருகிய நீண்ட வாளுடன், காற்றில் சுருள் முடி அலைய, கூரிய நுனி மேலெழுந்து வளைந்திருக்கும் தோலினாலான காலனிகளுடன் வெண்புரவிகளில் கம்பீரமாகப் பவனி வரும் அழகிய இளவரசர்களின் அல்லது வாளிப்பான உடலும், வடிவான உடைகளுமாய் ஒய்யாரமாய் நிற்கும் இளவரசிகளின் வர்ணப்படங்களைக் கண்டால்; அந்தப் புத்தகத்தினுள்ளிருக்கும் புதினங்களை அறியவேண்டும் போல் மனம் பரபரத்ததுண்டு.  அந்த வர்ண ஓவியங்களை எந்த ஓவியன் வரைந்திருப்பானென்று அந்த வயதுகளிலேயே யோசித்திருக்கிறேன்.

       இத்தகைய அனுபவங்கள் தான் பின்னாட்களில் பள்ளிப்பாட நூல்கள் தவிர, ஏனைய நூல்கள் பக்கமும்  என் கவனம் திசை திரும்புவதற்குக் காரணங்களாக இருந்திருக்கக்கூடும்.

       காலப்போக்கில் அம்மா வாசித்து முடித்துவிட்டு வைக்கும் நாவல்களை மெல்ல மெல்ல நானும் எடுத்து வாசிக்கத்தொடங்கினேன்பள்ளிப்பருவம் என்பதால் கதைப்புத்தகங்களை நான் வாசித்து என் நேரத்தைச் செலவழிப்பதை அம்மா அவ்வளவாக விரும்புவதில்லைபாடப்புத்தகங்களை படிக்கும்படி என்னை எப்போதும் வற்புறுத்துவார் அம்மா.   அத்தருணங்களில் தான் அம்மாவுக்குத் தெரியாமல் நான் புத்தகங்களை ஒளித்து வைத்து வாசிக்க வேண்டிய தேவை எனக்கேற்பட்டது.

      நான் படித்துக் கொண்டிருந்த பருத்தித்துறை வடமராட்சி இந்துமகளிர் கல்லூரியில் இருந்த சிறிய நூலகம் சற்றே விஸ்தரிக்கப்பட்டு, அழகான பெரிய நூலகமாக அப்போது மாறியிருந்தது. பள்ளி இடைவேளைகளில், அல்லது சில பாடங்களிற்கு ஆசிரியர்கள் சமூகமளிக்காமல் போகும் தருணங்களிலெல்லாம் கல்லூரி மேல்மாடியிலிருக்கும் புதிய கட்டட நூலகத்திற்கு நான் பறந்து சென்றுவிடுவேன்பாடப்புத்தகங்கள் தவிர்ந்த, எனக்குப் பிடித்த நூல்களை அம்மாவுக்குத் தெரியாமல் அங்கிருந்தே வசதியாக வாசிக்கத் தொடங்கினேன்அது யாருடைய தொந்தரவுமில்லாத, அமைதியான, என் மனதிற்குப் பிடித்தமான ஒரு இடமாக எப்போதுமிருந்தது.

       தினமும் பாடசாலை இடைவேளைகளில் எல்லோரும் மைதானத்திற்கு விளையாடச் சென்று விடுவார்கள்நானோ யாராவது ஒரு தோழியை இழுத்துக்கொண்டு மேல்மாடியிலிருக்கும் கல்லூரி நூலகத்திற்குச் சென்று விடுவேன்அங்கு சரோஜினி அக்கா அப்போது நூலகத்திற்குப் பொறுப்பாக இருந்தார்அவர் என்னைக் கண்டால் என் அப்பாவின் தங்கையான மூத்தமாமி யோகேஸ்வரி அவர்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிடுவார்அவர்கள் இருவரும் அதே பாடசாலையில் ஒன்றாகப் படித்தவர்கள், இணைபிரியா நண்பிகள் என்று அவர்களின் பள்ளிக்கால சம்பவங்கள் பலதையும் என்னிடம் சொல்லி மகிழ்வார்அவர் அக்கதைகளை சொல்லும் போதே அவரின் முகமெல்லாம் மலர்ந்து, அவரின் அடுக்குப்பற்கள் முழுவதும் பளீரென்று தெரியும்.   அதிலிருந்தே அவர்கள் என்னவெல்லாம் பேசிக்களித்திருப்பார்கள் என்று நான் மறுபுறம் மனதிற்குள் கற்பனை பண்ணிக் கொண்டேயிருப்பேன்என் மூத்தமாமியின் மீது அவருக்குள்ள அன்பிலும் நட்பிலும், நான் என்ன புத்தகம் கேட்டாலும் சரோஜினி அக்கா மறுக்காமல் சிரித்த முகத்தோடு எடுத்துத் தருவார்அது என் வாசிப்பிற்கு எப்போதும் மிகுந்த வசதியாக இருந்தது.

      அங்கு தான்  'ஒலிவர் டுவிஸ்ட்', ஹெலன் ஹெல்லர் எழுதிய சுயசரிதையின் மொழிபெயர்ப்பு, மற்றும் ஈழத்து எழுத்தாளர்களான பாலமனோகரன், செங்கையாழியான், ஆகியோரது சில நாவல்கள், மற்றும் இலங்கைப் படைப்பாளிகள் எழுதிய பல கட்டுரைகள், மரபுக் கவிதைகள், எனப் பலதையும் முதன்முதலாக இடையூறுகள் ஏதுமில்லாமல் வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

       இந்த வாசிப்பு அனுபவங்கள் மேலும் பல நாவல்களையும் எழுத்துக்களையும் தேடி என்னை அலையவைக்கத் தொடங்கியதுஅச்சமயம் வாசிப்பினூடாகக் கிடைத்த சில தோழிகள் மூலம் வெ வ்வேறு பத்திரிகைகளின் வெளியீடுகளாக வந்துகொண்டிருந்த சில நாவல்களும் என் கைகளுக்கு வந்து போயின.   அவற்றில் வீரகேசரி, ஜனமித்திரன் வெளியீடுகளாக வந்த  சாத்தானின் ஊழியர்கள், ஜமேலா, கறுப்புராஜா ஆகிய நாவல்களும் அடங்கும்.

     அவற்றை நான் வீட்டில் வைத்து வாசிக்க முடியாத போது, என் பாடப்புத்தகங்களோடு கொண்டு சென்று பாடசாலை நூலகத்தில் வைத்து வாசித்திருக்கிறேன். சில நாவல்களை சரோஜினி அக்காவுக்குத் தெரியாமல் வேறுபுத்தகங்களிற்குள் ஒளித்து வைத்தும் வாசித்திருக்கிறேன்.

        நான் ஒளித்து வைத்து வாசித்த புத்தகங்களில் பல உண்மைக்கதைகளைப் பின்னணியாகக்கொண்டு எழுதப்பட்டவை.   அந்த வயதில் (11.12 வயதுகளில்) அந்த நாவல்கள் என்னை எல்லாவிதத்திலும் உலுக்கியெடுத்தன. அதன் பின்னர் அதீத கற்பனைகளை மட்டுமே கொண்ட கதைகளைத் தவிர்த்து உண்மைகள் சார்ந்த கதைகளை மட்டுமே நான் தேடித்தேடி வாசிக்கத் தொடங்கினேன்.

       ஆனால் ஒரு தருணத்தில்   படைப்புகளில்  வாசிக்க வேண்டியவை, வேண்டாதவை எனப் பிரித்துணரத் தொடங்கியிருந்தேன். அது கண்ணில் கண்ட நூல்களையெல்லாம் நான் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட அனுபவமாக  இருக்கலாம்.   புனைவுகள் கற்பனைகளற்ற, உண்மைக் கதைகளை மட்டுமே உள்ளடக்கியவை என்று சொல்லப்படும் சில நூல்கள், எழுத்து வடிவத்திலும், இலக்கிய நயத்திலும்  ஒரு நாவலுக்குரிய சிறப்பம்சங்களை  எட்ட முடியாமல் போகும்  பலவீனத்தை, வாசிப்பினூடாக நான் உணரத்தொடங்கியது  கு..ரா வின் சிறுகதைகள், ஜானகிராமனின் நாவல்கள், சுந்தரராமசாமியின் நாவல்கள், ஜெயகாந்தனின் நாவல்கள், எஸ்.பொன்னுத்துரையின் நாவல்கள் எனப் பலவற்றை வாசிக்கத் தொடங்கிய போது தான்.

       1983ல் தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் கல்விச்சேவையில் 'சமூகசஞ்சிகைஎன்றொரு நிகழ்ச்சியினை தயாரித்து வழங்கிக்கொண்டிருந்தார்.

        அந்த நிகழ்ச்சியில் நடாத்தப்பட்ட பொதுஅறிவுப் போட்டியொன்றில் எனக்கு முதற்பரிசு கிடைத்த போது அதற்கு பரிசிலாக, அவரால் சிங்களத்திலிருந்து (கருணாசேன ஜயலத் எழுதிய "கொளு ஹதவத்த) தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட  'நெஞ்சிலோர் இரகசியம்'  மற்றும் அதன் இரண்டாம் பாகமான  'இறைவன் வகுத்தவழி'  ஆகிய இரண்டு நாவல்களும் இரு வேறு போட்டிகளின் பரிசில்களாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் கல்விச்சேவை  தபாலில் எனக்கு அனுப்பி வைத்திருந்ததுஅப்பொழுது ஐயாத்துரை அவர்கள் கல்விச்சேவைப் பகுதிக்கு பொறுப்பாளராக இருந்தார். அவருடைய கையெழுத்துடன் அந்த நாவல்கள் எனக்கு வந்து சேர்ந்தன.   இரு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட  அந்த  இரு நாவல்களும்,  அந்த வயதில்  ஏற்படுத்திய அதிர்வுகள் எனக்கு இப்பவும் ஞாபகமிருக்கிறது.

      அதன் பின்னர் தம்பிஐயா தேவதாஸ் அவர்களை முதன் முதலாக நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்ததுஅச்சமயம் யாழ் தபாலகத்தில் அதிபராகக் கடமையாற்றிக்கொண்டிருந்த எஸ்.உமாகாந்தன் அவர்கள் 'தமிழ்ஒலி வானொலி நேயர் மன்றம்' என்ற பெயரில், இலங்கை வானொலியில் நேயர்களாகவும், படைப்பாளிகளாகவும் இருக்கும்; இளம் கலைஞர்களை ஒன்று சேர்த்து ஒரு அமைப்பினை யாழ்ப்பாணத்தில் நடாத்திக்கொண்டிருந்தார்.   அதில் நான் உட்பட பல இளங்கலைஞர்கள் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

       அந்த மன்றத்தின் வெளியீடாக 'தமிழ்ஒலி வானொலிநேயர் மஞ்சரி' என்றொரு காலாண்டிதழும் வந்து கொண்டிருந்தது.   உமாகாந்தன் அவர்கள் நடாத்தும் கூட்டங்களிற்கு நானும் உறுப்பினர் என்ற வகையில்  அவ்வப்போது போய் வருவதுண்டு.   இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலிருந்து அவ்வப்போது நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் பலர் அக்கூட்டத்திற்கு வந்து கலந்து செல்வார்கள்.   அங்கு தான் முதன்முதலாக  தம்பிஐயா தேவதாஸ் அவர்களை நேரில் காணும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருந்தது.  அவரது நேரடிச் சந்திப்பு நான் மேலும் பல நூல்களைத் தேடி வாசிக்கும் சந்தர்ப்பத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்திருந்தது.   தேவதாஸ் அவர்களுக்கு சிங்கள மொழியில் நிறைந்த பரிச்சயம் இருப்பதால் சிங்கள நாவல்கள் பற்றியும், அதே வேளை இலங்கை சினிமாத்துறை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு இருப்பதால் அவை பற்றியும் பல உரையாடல்களை அவருடன் மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது.   வாசிக்க வேண்டிய முக்கியமான இலங்கைச் சிறுகதைகள், நாவல்களை அவரே எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்தார். அந்த அறிமுகம்  தான் பின்னாட்களில் குறிப்பிட்ட இலங்கைப் படைப்புகளைத் தேடி என்னை நூலகங்களிற்குச் செல்ல வைத்தன என்றால் மிகையில்லை.

       பதின்மப் பருவம் கடந்து இருபதுகளில் நுழையும் போது நானே சிறுகதைகள் குறுநாவல்களை எழுத ஆரம்பித்து விட்டேன்.   அவை வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு, மல்லிகை, சிரித்திரன் என எல்லாப் பத்திரிகைகளிலும் அவ்வப்போது வரத்தொடங்கியுமிருந்தன.

       அந்த காலகட்டத்தில் தான் பருத்தித்துறை தம்பசிட்டி கதிரவேற்பிள்ளை வாசிகசாலைக்கு முதல் தடவையாக சென்றிருந்தேன்என் சைக்கிளை வாசிகசாலையின் வாசலில் இருக்கும் மின்கம்பத்துடன் சாய்த்து நிறுத்தி விட்டு திரும்பும் போது, வாசலைச் சூழ்ந்தபடி பல இளைஞர்கள் நிற்பது தெரிந்தது.   அவர்களில் பலர்; வாசிகசாலைக்கு வாசிப்பிற்காக வந்திருப்பது போலல்லாமல் புதினம் பேசிக்களிக்க வந்து நிற்பது போலவே என் கண்களுக்குத் தோன்றினர்.   அவர்களைக் கடந்து வாசிகசாலைக்குள் நுழைவதே எனக்குப் பெரும் சங்கடமாக இருந்தது.   அவர்கள் எல்லோரும் ஏதோ அதிசயமான பொருள் நடந்து போவது  போல் என்னையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தமை எனக்கு மிகுந்த கூச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதுதிரும்பிப் போய்விடலாமா என்று கூட ஒரு கணம் அப்போது யோசித்தேன்.

       அந்த வாசிகசாலைக்கு அருகில் தான் எனக்கு ஜி.சி. .லெவல் தமிழ் பாடம் கற்பித்த, எனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியையான பண்டிதர் பொன்னம்மா கணபதிப்பிள்ளை அவர்களின் வீடும் இருந்தது.   அவரிடம் நான் தமிழ் கற்கும் போது தான், தமிழ் மீது எனக்கிருந்த ஆர்வமும் பற்றுதலும் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது.   அப்போது நான் வகுப்புப் பரீட்சைகளில் தமிழில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுக்கொள்வேன்கல்லூரிப்படிப்பு முடிந்த பின்னரும் தமிழ் இலக்கணங்களில் எனக்கெழும் சந்தேகங்களை அவ்வப்போது அவரின் வீடு தேடிச்சென்று கேட்டு வருவேன்அவர் தான் என் நூலகத் தாகத்தைத் தீர்ப்பதற்கு முக்கியமான வழிகாட்டிகளில் ஒருவராக இருந்திருக்கிறார் என்பது இப்போது யோசித்துப் பார்க்கும் போது எனக்குத் தெரிகிறதுபருத்தித்துறை தம்பசெட்டியிலிருக்கும் கதிரவேற்பிள்ளை வாசிகசாலைக்குச் சென்று தேவையான நூல்களை எடுத்துப் படிக்கலாம் என்று அறிவுரை கூறி, என்னை முதன் முதலாக அந்நூலகத்திற்குச் செல்ல வைத்ததும் அவர் தான்.

       அதனால் உள்ளுர ஒரு தைரியம் எனக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருந்தது. யார் என்னை வேடிக்கையாகப் பார்த்த போதும் நான் துணிச்சலை வரவழைத்துக்கொண்டு வாசிகசாலைக்குள்; நுழைந்து எனக்குத் தேவையான புத்தகங்களை எடுத்து வந்துவிடுவேன்ஆயினும் அங்கு அமர்ந்திருந்து புத்தகங்களை வாசிக்கப் பிரியப்படும் போதும் அதற்கான தருணங்களும், அதற்கான ஒரு சௌகரியமான சூழ்நிலையும் எப்பொழுதும் கிடைக்காத பட்சத்தில் எனக்கந்த அனுபவமும் கிடைக்கவில்லை.

       ஆண் வாசகர்கள் சிலரின் அதீத கண்காணிப்பு ஒரு தருணத்தில் சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருந்ததால் நான் அங்கு செல்வதை மெல்ல மெல்லத் தவிர்க்கத் தொடங்கியிருந்தேன்.   எனக்குத் தேவையான சமயங்களில் என் தம்பிமாரை அனுப்பி குறிப்பிட்ட புத்தகங்களை அங்கிருந்து எடுப்பித்துக் கொள்ளத்தொடங்கினேன்.

        1984, 85 களில் என் தொழில்நுட்பக்கல்விப் படிப்பின் போது கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியிலிருக்கும்  நூலகத்தில், தொழில்துறை சம்பந்தமான நூல்களை எடுத்துப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தது. அதற்குப் பின்னர் பருத்தித்துறை புலோலி வாசிகசாலையைத் தேடிச்செல்லும் ஆர்வத்தை, அப்போது அதற்குப் பொறுப்பாளராக இருந்த திருச்செல்வம் அண்ணை அவர்கள் எனக்கு ஏற்படுத்தினார்அவரை பருத்தித்துறை 'உதயன் புத்தகசாலை'யில் நான் புத்தகம் வாங்கப் போகும் தருணங்களில் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததுஅவர் அப்போது வீரகேசரிப்பத்திரிகையின் பருத்தித்துறை நிருபராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தார்.   அவரின் அந்தப் பணியினைப் பற்றி உரையாடும் போது தான் எனக்கும் அந்த நிருபர் பணிமீது ஒருவித ஆர்வம் ஏற்பட்டிருந்ததுஅச்சமயம் பார்த்து, யாழ். ஈழமுரசு பத்திரிகைக்கு நிருபர் தேவையென அறிவித்தல் ஒன்று வந்திருந்ததுநானும்  அந்த நேர்முகத்திற்கு சென்றிருந்தேன்பருத்தித்துறை நிருபராக நானே தெரிவுமானேன். நெருக்கடியான அந்தப் போர்க்காலத்தில் அந்தப் பணி தந்த பல சிரமங்கள், நான் அதிலிருந்து பின்னர் விலகிக்கொள்ளக் காரணமானதுஅத்தகைய இக்கட்டான காலகட்டத்திலும் புலோலி வாசிகசாலை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தமை நானதைத் தேடிச்செல்வதற்கு முக்கிய உந்துதலாகவும் இருந்தது.

       புலோலி வாசிகசாலை அப்போது பருத்தித்துறை பிரதான வீதியில் அமைந்திருக்கும் புலோலி கந்தமுருகேசனார் சிலையருகில் ஒரு பெரிய கட்டடத்தில் இயங்கிக் கொண்டிருந்ததுநான் எனது சைக்கிளில் மூன்று மைல்கள் தூரம் கடந்து போய் எனக்குத் தேவையான புத்தகங்களை எடுத்து வருவேன்அங்கும் நான் செல்லும் வேளைகளில் இளம்பெண்கள் புத்தகங்கள் வாசிக்க வருவதை ஒருபோதும் கண்டதில்லைநான் வாசிகசாலைக்குச் சென்றால் நேராக திருச்செல்வம் அண்ணையின் அலுவலக அறைக்குள் நுழைந்து விடுவேன்அவருடன் உரையாடிவிட்டு எனக்குத் தேவையான நூல்களை அவர் மூலம் பெற்றுக்கொண்டு வந்து விடுவேன்அங்கு தான் நான் இலங்கையிலிருந்து வெளியாகும் அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகளையும் ஒன்று சேரப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்ததுஅவை தவிர பல தமிழக எழுத்தாளர்களின் நாவல்களை எடுத்துவந்து நீண்ட நாட்கள் வைத்திருந்து வாசிக்கும் வாய்ப்பும் அங்கிருந்து தான் நிறையக் கிடைத்தது. அங்கு தான் இலங்கையின் முக்கியமான பெண் எழுத்தாளர்களான குறமகள், குந்தவை, தாமரைச்செல்வி, யோகா தில்லைநாதன் மற்றும்  பல புதிய படைப்பாளினது படைப்புகளின் அறிமுகம் எனப் பலதும் வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருந்தது.  

      86 களின் பின்னர் அவ்விடத்திலிருந்து சற்று தள்ளியிருக்கும் பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலைக்கு அருகில் மிகப்பெரியதொரு இந்திய இராணுவமுகாம் இயங்கிக்கொண்டிருந்தமையானது புலோலி வாசிகசாலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு பெரும் இடையூறையும் அசௌகரியத்தையும்  ஏற்படுத்தத்தொடங்கியமை பெரும் துரதிஷ்டம்.

       1986 ல் வடமராட்சி 'லிபரேசன் ஓப்பரேசன்' இராணுவ நடவடிக்கை முடிந்தவுடன் இந்திய இராணுவம் வடக்குக் கிழக்கெங்கும் குவிக்கப்பட்டிருந்த சமயம், எழுத்து, வாசிப்பு, இயல்பு வாழ்க்கை எல்லாமே முற்றுமுழுதாகக் குலைந்து போகத் தொடங்கியிருந்தது.  அத்தருணம் தான் எனது முதல் சிறுகதைத் தொகுப்பான 'நிழல்கள்' நூல் பருத்தித்துறை  வடஇந்து மகளிர் கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டதுஅதனை வெளிக்கொண்டு வருவதில் முன்னின்றவர்களில் முக்கியமானவரும், வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவரும், உதயன் புத்தகசாலை உரிமையாளரும், விமர்சகரும் இலக்கிய ஆர்வலரும், தற்போது பருத்தித்துறையில் இயங்கிவரும் 'ஞானாலயம்' கலா மன்றத்தின் உரிமையாளருமான  திரு.து.குலசிங்கம் அவர்கள்.    இராணுவக் கெடுபிடிக்காலங்களில், அவரது வீட்டிலிருக்கும் அரும் பொக்கிஷம் போன்ற வீட்டு நூலகத்திலிருந்து நூல்களைப் பெற்று வாசிப்பதற்காக நான், ரகு அண்ணா(ரகுபரன் பாலகிருஷ்ணன்), இன்னும் பலர் அவ்வப்போது அவர் வீட்டுக்குப் போய் வருவோம்குலசிங்கம் அவர்களின் துணைவியாரான இந்து அக்கா அவர்கள் முகம் மலர வரவேற்று சிற்றுண்டிகள் தேநீர், பாயாசம் என்று எதையாவது பரிமாறாமல் அனுப்பி வைக்கமாட்டார். சிற்றுண்டிகளும் உண்டு புத்தகங்களும் எடுத்து வந்து வாசிக்கக் கூடிய ஒரு மகிழ்வான இடமாக அவரின் வீட்டு நூலகம் அமைந்திருந்தததை மறக்க முடியாதுவெளியில் கடைகளிலும் தேடிக்கிடைக்காத பல அரிய நூல்களை அங்கிருந்து தான் நான் பெற்று வந்து வாசித்திருக்கிறேன்.

        தொடர்ந்த காலங்களில் எனது வீட்டில் நான் படிக்கும், எழுதும் எனது மேசையைச் சுற்றி ஒரு குட்டி நூலகம் தானாகவே மெல்ல மெல்ல உருவாகத் தொடங்கியிருந்தது. ஆனால் போரும், இராணுவமும் உருக்குலைத்துச் சென்ற எங்களது எத்தனையோ பொக்கிஷங்களில் என் குட்டி நூலகமும் ஒன்று என்பது பெருந்துயரம்!

        ஆனால் எவராலுமே உருக்குலைத்து விட முடியாத, எனக்குத் தெரியாமலே என்னைப் புடம் போட்டு ஆளாக்கிய இரு நூலகங்கள் என் நினைவிலும் வாசிப்பிலும்; எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றனஅவை என் அப்பாவும், என் அண்ணன் பிறேமராஜனும் தான்!

       நான் எப்பொழுதும் நுழையக்கூடிய உயிருள்ள நூலகங்களாயிருந்த என் அப்பாவையும், அண்ணனையும் இத்தருணம் அன்புடனும் நன்றியுடனும் நினைத்துக் கொள்கிறேன்!

                                                                                               சந்திராஇரவீந்திரன்

                                                                                                                    லண்டன்                      

 (இலங்கையிலிருந்து வெளியாகும்  'எங்கட புத்தகங்கள்' காலாண்டு சஞ்சிகையில் (ஏப்ரல் 2021)  பிரசுரமானது)

Comments

Popular posts from this blog

காகம் விழுந்து கரைந்தது!

காற்று – சிறுகதை

காத்தவராயரும் இலந்தை மரமும்