காகம் விழுந்து கரைந்தது!

 


காகம் விழுந்து கரைந்தது!

 

      யாராவது கதை சொல்ல வேண்டும். நான் ஐம்புலன்களையும் ஒன்றுகூட்டி,  ஏழுலகங்களையும் மறந்து கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதிலும் நம்பமுடியாத உண்மைக்கதைகளை சம்பந்தப்பட்டவர்களது வாயாலேயே கேட்பதென்றால் அது தரும் பேரின்பம் விபரிக்கமுடியாதது! அது ஒரு போதை நிலை!   

      எழுபதுகளின் ஆரம்பகாலம் அது!  எந்நேரமும் சின்னச் சின்னக் கனவுகளில் மிதந்தபடியே திரியும் பதின்ம வயதைத் தொடுகிற பருவம்.  எல்லாப் புதினங்களையும் அறிந்து விட வேண்டுமென்கிற அங்கலாய்ப்புடன் அலைந்தபடியேயிருக்கும் மனசு! எல்லாவற்றையும் இருத்தி வைத்துப் போதிக்கும் காலம்!

      கதை கேட்பதற்காகவே நான், பெத்தம்மா,  பாட்டா வீட்டிற்கு எப்பவும் ஓடியோடிப்போவேன். அடைமழை என்றாலும்,  அம்மா தடுத்தாலும் ஏதாவதொரு அலுவலை சாட்டிக்கொண்டு மழைவெள்ளத்திற்குள்ளால் சட்டையை தூக்கிப்பிடித்தபடி,  கால்களால் நீரை எத்தியெத்தி அளைந்தபடி,  அவர்களின் வீட்டிற்கு எப்படியோ போய்ச்சேர்ந்து விடுவேன்.

      பெத்தம்மாவும் பாட்டாவும் வசிக்கும் வீட்டிற்கு வெள்ளவாய்க்கால் வழியாகத்தான் போகவேண்டும். மழைக்காலங்களில் வரும் பெருவெள்ளம் ஊராவீட்டுக் குப்பைகள்,  பிசுங்கான்கள் கற்கள்,  உடைந்த மரத்துண்டுகள் எல்லாவற்றையும் உருட்டியெடுத்துக்கொண்டு வருவது வழமை. வெறும்காலோடு வெள்ளவாய்க்கால் வழியாக நடக்கும் போது அவை காலைப் பதம் பார்த்து,  மாதக்கணக்காக,  பின் வருடக்கணக்காக காலுக்குக் கட்டுப் போட்டுக்கொண்டு திரிவது வேறு கதை.

       அவர்கள் தமக்காக கல்வீடொன்றைக் கட்டி வைத்துவிட்டு,  அங்கு சில கட்டுவேலைகள் முற்றுப்பெறாததால் அந்த வீட்டிலிருந்து சில யார்கள் தள்ளியிருக்கும் அவர்களது சற்சதுரமான ஒரு சிறிய காணிக்குள் ஒரு அழகான குடிசைவீடு கட்டி,  அங்கு தான் அப்போது வசித்து வந்தார்கள்.  அந்தக் குடிசை வீட்டைச்சுற்றி பாட்டா அழகாக,  கச்சிதமாக,  கதியால்கள் நாட்டி,  பனம் மட்டைகளால் வரிச்சுக்கட்டி, அரைவாசி உயரத்திற்குக் கிடுகு கட்டி எந்நேரமும் சுத்தமாக வைத்திருப்பார். எப்பவும் தன் கையாலேயே விதம் விதமாக படலை செய்து முற்றத்து வாசலுக்கு பொருத்தி விட்டிருப்பார். வீட்டு முற்றத்திலிருந்து ஒழுங்கைத் தெருவிற்குள் இறங்குவதற்கு ஒரு நீளமான பளிங்குக் கல்லும் சில கொங்கிறீற் கற்களும் சேர்த்து படிகளாக பதித்து வைத்திருந்தார்.

      நான் பாட்டா வீட்டிற்குப் போனால் முதலில் முற்றமெல்லாம் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்து வேவு பார்த்துவிட்டுத்தான் உள்ளுக்குள் நுழைவேன். வீட்டைச் சுற்றி வகைவகையான முருங்கை மரங்கள்,  செவ்வரத்தம்பூ மரங்கள்,  பொன்னலரி மரம்,  வேலி நீளத்திற்கும் கள்ளி மரங்கள்,  சண்டி மரம் என முற்றம் பசுமையில் நிறைந்திருக்கும்.

      முருங்கை மரங்கள் ஒவ்வொன்றும் குலைகுலையாகக் காய்க்கும்.  ஒவ்வொரு மரத்தின் காய்களும் ஒவ்வொரு விதமான சுவை. பெத்தம்மா அவற்றில் சமைக்கும் கறிகளை நினைத்தால் இப்பவும் வாய் ஊறும்

      ஒரு மரத்தின் காய்கள் நல்ல கழிப்பிடிப்பாக, சதைப்பிடிப்பாக குட்டையான காய்களாக இருக்கும். இன்னொரு மரத்தின் காய்களை நறுக்கும் போது அவற்றின் சாறு சீறிப்பாயும். இன்னொரு மரத்தின் காய்களில் விதைகளே இருக்காது சதை மட்டும் தான். இன்னொன்று தோல் மெலிதாக இருக்கும். இன்னொன்று தோல் தடிப்பாகவும்,  மெல்லிய நீளமான காய்களாகவுமிருக்கும்.

      பெத்தம்மா ஒவ்வொரு வகைக் காய்களுக்குமேற்ப அவற்றை சுவைபடச் சமைப்பா. சதைப்பிடிப்பான காய்களில்  சதையை வழித்தெடுத்து, சின்ன றாள்,  வெங்காயம்பச்சைமிளகாய், மஞ்சள் யாவும் சேர்த்து ஒரு வறை செய்வா. அதன் மணமும் சுவையும் ஒரு மாதத்திற்கு உதடுகளில் ஒட்டிக்கிடக்கும். அவ முருங்கைக் காய்களில் சமைக்கும்; அரைத்த சரக்குக்கறி உலகத்தில் எங்குமே எப்போதும் கிடைக்காதது.  பெத்தம்மா செய்யும் சிவப்புப் பச்சையரிசிப் பாற்சோற்றுடன் அந்தக் கறியை சேர்த்துச் சாப்பிட்டவர்கள்  காலமெல்லாம் அவவின் காலடியில் விழுந்து கிடக்க ஆசைப்படுவார்கள்.

         அவ  எங்கள்வீட்டுக்கு வந்துஅம்மிக்கல்லில்  சரக்குப் பொருட்களை சேர்த்து அரைக்கும் போதே எனக்கு விளங்கிவிடும்,  அன்றைக்கு பெத்தம்மாவின் வீட்டில் மீன் அல்லது முருங்கைக்காய் சரக்குக்கறி தான் என்று

      அம்மியில் அவற்றை அரைத்துக்கொண்டிருக்கும் போதே வாசனை ஊரெல்லாம் பரவத்தொடங்கிவிடும். அரைத்த கூட்டை அம்மியிலிருந்து வழித்தள்ளியெடுத்து ஒரு வெள்ளிக் கிண்ணத்திற்குள் போட்டு எடுத்துக்கொண்டு போகும் போது நானும் அவவின் பின்னால் இழுபட்டுக்கொண்டு போய்விடுவேன்.

       அப்படியொரு நாள் போன பொழுது தான் பெத்தம்மா அவித்த சிவப்பரிசி மா இடியப்பமும், அம்மியில் அரைத்து வைத்த மீன் குழம்பும்,  தக்காளிச் சொதியும்நல்லெண்ணெய்யில் வறுத்த முட்டைப்பொரியலும் சேர்த்துக் குழைத்து,  பாட்டா எனக்கு கவளம் கவளமாக ஊட்டி விட்டுக்கொண்டிருந்தார். பெத்தம்மா சமைத்த உணவை,  பாட்டா பக்குவமாகப் பிசைந்து,  குழைத்து, உருட்டியுருட்டி ஊட்டி விடும் போது கிடைக்கும் சுவை இருக்கிறதே,  அது வார்த்தைகளில் அடங்காதது! ஜென்மத்திற்கும் என்னோடு ஒட்டிக்கிடப்பது!

       வயிறு நிறையச் சாப்பிட்ட பின்னர் கறுத்தக்கொழும்பு மாம்பழமொன்றை எடுத்து,  நிதானமாக தோல் சீவி,  ஒரு துண்டை பாட்டா என் கையில் வைப்பார். அடுத்த துண்டை தன் வாயில் வைப்பார். மறு துண்டை பெத்தம்மாவின் கையில் வைப்பார். அந்தத் தித்திப்புடனேயே விறாந்தாவிலிருக்கும் நீளமான வாங்கில் தனது சால்வையை விரித்துவிட்டு ஒரு தலையணையைப் போட்டு; அப்படியே சரிந்துவிடுவார். பெத்தம்மா வெறும்சீமெந்துத் தரையில் ஒரு சீலையைப் போட்டுவிட்டு அதன் மேல் சரிந்து விடுவா.

       இருவரும் நித்திரை கொள்ள மாட்டார்கள் சரிந்து கிடந்தபடி ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். அந்தச் சின்னஞ்சிறு அழகான குடிசை வீட்டிற்கு முன்னாலிருக்கும் ஒழுங்கையின் மறுபுறம் நேரெதிரே,  நெடுநெடுவென உயர்ந்து நிற்கும் பனைமரங்கள். அதனால் பனங்காற்று எப்பவும் வேலிக்கு மேலால்  வந்து, அவர்களின் வீட்டிற்குள் உலாவியபடியே இருக்கும். பனம்பூக்களும் அவ்வப்போது அவர்களின் வீட்டுமுற்றத்தில் பறந்துவந்து விழுவதுண்டு. பனைமரங்கள் வீட்டிற்கு எதிரே இருப்பதால் பெத்தம்மா அடிக்கடி பனங்காய் பணியாரம் சுடுவதும்,  பாணிப்பனாட்டு போடுவதும்,  அவற்றை சுவைப்பதற்காக நான் தவம் கிடப்பதும் இன்னுமொரு கதை.

       அப்படியொரு நாள் மதிய உணவு அருந்திவிட்டு பாட்டாவும் பெத்தம்மாவும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது தான்,  காகம் ஒன்று வந்து அவர்களது முருங்கை மரத்தில் குந்தியிருந்து அடித்தொண்டையால் கரைந்து கொண்டிருந்தது.

      "தம்பி குமாரசாமி கொழும்பிலையிருந்து வரப்போறான் போலையிருக்கு" என்று பெத்தம்மா சொன்னா.

      "எப்பிடித் தெரியும்?" என்று கேட்டேன்.

       காகம் கரைவதால் நிகழும் சம்பவங்களும்,  அதனால் வாழ்வில் அவ தரிசித்த சில உண்மைச் சம்பவங்களுமென பல கதைகளை அப்போது தான்,  பெத்தம்மா எனக்குச் சொல்லத் தொடங்கினா. காகங்கள் திடீரென்று வீட்டு முற்றத்தில் விழுந்து புரண்டு சண்டைபிடிப்பது,  அலறலுடன் கரைவது,  ஒருவர் வீட்டைவிட்டுப் புறப்படும் போது அவரின் பின்னால் சென்று கூட்டிப்பெருக்கித் தள்ளுவது என செய்யக்கூடாத,  நிகழக்கூடாத,  பலவிடயங்கள் பற்றி அதன் காரணகாரியங்களுடனும் அனுபவங்களுடனும் கதைகதையாகச் சொல்லிக்கொண்டிருந்தா

      வழமையாகவே இப்படியான கதைகளை அவ சொல்லும் போது நான் வாயைப் பிளந்தபடி அவற்றை ரசித்துக் கேட்டுக்கொண்டே ஒரு தருணத்தில் தூங்கிவிடுவேன். அன்றைக்கும் அது போலவே தான்.  ஆனால் அவ சொல்லும் அத்தனை கதைகளும் என் நெஞ்சுக்கூட்டிற்குள் அச்சடித்தது போல் அப்படியே பதிந்து போய்விடும்.

      'காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக இவை இருக்குமோ' என்றும் நான் எனக்குள் யோசிப்பதுண்டு. ஆனால் நினைவுகளுக்கும், உணர்வலைகளுக்கும், சம்பவங்களிற்கும்,  இந்த பிரபஞ்சத்திற்கும் இருக்கும் தொடர்புகள் போல் அந்த மாயவலைக்குள் இருக்கும் பிரித்தறிய முடியாத ஒரு பாகம் இதுவாக இருக்கலாம் என எண்ணத் தோன்றிய ஒரு சம்பவம் பின்னாளில் நடந்தேறியது!

       இதே காலத்தில் தான் சண்முகக்குஞ்சையா எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தார். அவர் என் அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பி. என் இளைய அப்பாச்சியின் மகன். அவர் எங்கள் மேல் சொரியும் அன்பும் பாசமும் அளவில்லாதது. அவர் அப்போது பருத்தித்துறை மின்சாரசபையில் ஊழியராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.

      எப்போதும் நல்லெண்ணெய் தேய்த்து தலைமுடியை படிய வாரி மினுங்க மினுங்க வைத்திருப்பார். அருகில் நின்றால் நல்லெண்ணெய் வாசம் வீசும். வாரிய சீப்பின் ஒழுங்கான கீறல்கள் வரிவரியாகத் தெரியும். நெற்றியில் எப்போதும் ஒரு திருநீற்றுக் குறி இருக்கும். மீசையை எப்போதும் மூக்கிற்குக் கீழ் சிறிய தூரிகை போல் நறுக்கி ஒரேயளவாக வைத்திருப்பார். அவர் நீளக்காற்சட்டை அணிந்ததை நான் வாழ்நாளில் கண்டதில்லை. எப்போதும் தோய்த்து அயர்ன் செய்த அரைக்காற்சட்டை தான் அணிந்திருப்பார். அவர் அதிர்ந்து பேசி ஒருபோதும் நானறியேன். முகம் எப்போதும் ஆழ்ந்த சாந்தத்தில் மூழ்கிக்கிடக்கும்.

       அவர்களின் வீட்டுக்குப் போனால் எப்போதும் ஏதாவது செய்து கொண்டேயிருக்கும் அவரைத்தான் முதலில் முற்றத்தில் காண்பேன். வீட்டைச்சுற்றி அழகாக வேலிகட்டி,  வேலி நீளத்திற்கும் சதுரக்கள்ளிச்செடிகள்,  செவ்வரத்தை மரங்கள்,  விதம்விதமான குறோட்டன் மரங்கள்; எல்லாம் வைத்து அவற்றைப் பராமரித்துக் கொண்டிருப்பது அவர் தான். பின்வளவில் மாதுளை, அகத்திமுருங்கை,  விலாட் மா,  தென்னை, விளாத்தி என்று பல்வகை மரங்கள் மதாளித்துச் செழித்துக் கிடப்பதற்கு அவரின் பராமரிப்புத்தான் காரணம். வீட்டில் நிற்கும் நேரங்களில் மரங்களிற்கு பத்தியம் பார்ப்பது அல்லது வேலியை சீர்ப்படுத்துவது அல்லது கதியால்கள் வெட்டி நாட்டுவது அல்லது கிணற்றடியை தேய்த்துக் கழுவுவது அல்லது பெரிய முற்றத்தை கூட்டித் துப்பரவு செய்வது என ஏதாவதொன்றை செய்து கொண்டேயிருக்கும் சண்முகக் குஞ்சையாவைத் தான் நான் எப்போதும் கண்டிருக்கிறேன்.

      அம்மாவுக்கு ஏதாவது வெளியில் செல்ல வேண்டிய வேலையிருந்தால் என்னைத்தான் அநேகமாக அவரின் வீட்டுக்கு அனுப்பி அவரை வரச்சொல்லிவிடுவா. அவர் தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு குளித்து,  உடைகள் மாற்றி டாண்’ என்று அம்மாவின் முன்னால் வந்து நிற்பார்.

      எங்கள் வீட்டிற்கு அவர் வந்தால் அநேகமாக எங்கள் எல்லோருக்கும் குளிக்கவார்த்து,  துடைத்து,  உடைகள் மாற்றி,  தலை சீவி அலங்கரித்து விடுவார்.

       வேலி அடைக்க வேண்டிய காலங்களில் நான் உட்புறம் நின்று குத்தூசியில் கயிறு கோர்க்க, அவர் வெளிப்புறம் நின்று பாட்டுப் பாடியவாறே கயிறிழுத்து கிடுகுகளைக் கட்டுவார். கட்டும் போது நொடிக்கேள்விகள் கேட்டு பதில் தெரியாமல் என்னை திக்குமுக்காட வைப்பார். பின்னர் சந்தைக்குப் போய்,  அம்மா கொடுத்தனுப்பும் பட்டியலில் இருக்கும் அத்தனை பொருட்களையும் கொள்வனவு செய்து வந்து தருவார். தென்னைகளுக்கு பாத்திகட்டி, மண்வாரி நீரோடச் செய்வார். தொட்டியில் நீரிறைத்து நிரப்பி விடுவார். எங்களின் தோய்த்துலர்ந்த உடைகளை அயர்ன் செய்து தருவார். என்ன வேலை செய்யும் போதும் அவரின் முகத்திலிருக்கும் அமைதியும் மெல்லிய புன்னகையும் எப்போதும் கலைந்து போனதை நான் கண்டதில்லை.

       வேலையில் நிதானம், செய்நேர்த்தி, செய்வதை மனதார விரும்பி பொறுமையுடன் செய்து முடித்தல்,  எப்போதும் முகமலர்ச்சியுடனேயே இருத்தல், நேர்மைஒழுக்கம்,  பண்பு,  நல்ல பழக்கவழக்கம் என அவரிடம் இருந்த அரிய குணங்கள் அப்போது பெரிதாக எனக்குத் தெரியவில்லை. இப்போது நினைத்தால் புல்லரிக்கிறது.

     அன்றைக்கு நான் வழமை போல் எங்கள் வீட்டுப் பெரிய விறாந்தாவை தும்புத்தடியால் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தேன். சீமென்ற் தரைகளில் சிறுதுகள் மண் இருப்பதும் எனக்குப் பிடிக்காது. அப்படியிருந்தால் நேரகாலம் பார்க்காமல் முதல் வேலையாக அவற்றைக் கூட்டித்தள்ளி விடுவது என் வழக்கம். சில சமயம் மாலைப்பொழுதில் அதனை செய்யும் போது அப்பாச்சி அலறுவதுண்டு.

      'மம்மலுக்குள் தும்புத்தடி தூக்காதே' என்று கூச்சலிடுவா. நானோ எதற்கும் செவிசாய்க்காமல் துள்ளியோடிப்போய் கூட்டித்தள்ளி விடுவேன்.

     ஆனால் அன்றைக்கு நான் கூட்டிப் பெருக்கும் போது அது ஒரு மதிய நேரம். சண்முகக்குஞ்சையா பலசரக்குச் சாமான்களை அம்மாவிடம் கொடுத்துவிட்டு வேலைக்குப் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தார். போகும் போது "போட்டுவாறன்.." என்று சத்தமாக அவர் சொல்வது எல்லோருக்கும் கேட்டது.

      அவர் பெரியவிறாந்தாவைக் கடந்து,  நடசாலை வாசலைக் கடக்க முனையும் போது பிச்சிமரத்தில் குந்தியிருந்த இரண்டு காகங்கள் திடீரென்று அலறியடித்துக் கொண்டு வந்து, பொத்தென்று அவரின் பின்னால் விறாந்தாவின் நடுவில் விழுந்து இறக்கைகளை அடித்து, அலகுகளினால் ஒன்றையொன்று பிராண்டி அடிவயிற்றால் கரைந்து அலறிவிட்டு சடசடவெனப் பறந்து போயின!

   சண்முகக் குஞ்சையா நடந்து சென்றவாறே திரும்பிப் பார்த்துவிட்டு தெருவில் இறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்படுவது தெரிந்தது.

    நான் தும்புத்தடியைப் பிடித்தபடி வெலவெலத்து, வெருண்டு போய் நின்றிருந்தேன். காகங்கள் விழுந்து புரண்ட இடத்தில் விறாந்தாவில் மண்துகள்கள் பறந்து கிடந்தன. மெதுவாகப் போய் அவற்றைக் கூட்டி முற்றத்தில்; தள்ளி விட்டேன்.

   அவை விழுந்து புரண்டதும் அலறியதும் என் கண்களையும் செவியையும் விட்டுப் போகாமலிருந்தன.  ஏனோ எனக்கு பெத்தம்மா சொன்ன கதைகள் அச்சமயம் ஞாபகத்தில் வந்து போயின.

   'ஏதோ துர்ச்சம்பவம் நடக்கப் போகிறதோ?' என உள்ளுக்குள் மனம் துணுக்குற்றது. ஆனால் நான் யாரிடமும் அதனை சொல்லவில்லை. அந்தக் காட்சியைக் கண்டது இருவர்தான். ஒன்று நான். மற்றது சண்முகக்குஞ்சையா. ஆனால் காகங்களின் அலறல் ஓசை சமையலறைக்குள் நின்ற அம்மாவுக்கும் கேட்டதாக பின்னர் அம்மா ஒருவித பதைப்போடு கூறினா.

   அதுபற்றி யோசித்தவாறே இருந்த நான் சில மணிநேரங்களின் பின்னர் அவற்றை மறந்து வேறு வேலைகளில் இறங்கி விட்டேன். அன்றைக்கு பின்னேரம் ரியூசன் வகுப்பிற்காக வெளியில் சென்றிருந்த என் மூத்த அண்ணன் வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது பதகளித்தவாறே உள்நுழைந்தார். அவரின் முகம் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தது.

     "அம்மா...அம்மா.." என்று விறாந்தாவில் நின்றவாறே பதறிப்பதறி அழைத்தார். நான் எதுவும் புரியாமல் அவரையே பார்த்தபடி நின்றிருந்தேன்.

      அம்மா அவரின் குரலில் இருந்த பதற்றம் கண்டு யோசித்தவாறே விறாந்தாவுக்கு அவசரமாக ஓடிவந்தா.

     "சண்முகக்குஞ்சையா லைற் போஸ்ற்றிலை ஏறி வேலை செய்யேக்கை கரண்ட் அடிச்சு... கீழை விழுந்து அப்பிடியே போயிட்டார்..." அண்ணனின் குரல் நடுங்கியது.

     அம்மா "ஐயோ..." என்று அலறிய ஓசை பல வீடுகளிற்குக் கேட்டிருக்கும். அடுத்த கணமே வீட்டு வாசலில் ஊரவர்கள் கூடிவிட்டார்கள்.

      நான் அப்படியே விழி பிதுங்கியவளாய் நின்றிருந்தேன். எனக்கு உதடுகள் நடுங்கியபடியே இருந்தன. இதயம் உள்ளுக்குள் டமார் டமாரென அடிப்பது எனக்கே கேட்பது போலிருந்தது.

     "உலகநாயகிப்பாட்டி வீட்டுச் சந்தியிலை இருக்கிற லைற் போஸ்ற்றிலை ஏறி திருத்த வேலை செய்யேக்கை தான் இது நடந்ததாம். இப்ப எல்லாம் முடிஞ்சுது.." அண்ணன் இப்போது அழத்தொடங்கிவிட்டார்.

      எனக்கு மண்டையெல்லாம் விறைத்துக்கொண்டு வருவது போலிருந்தது! நெஞ்சுக்கூடு நொருங்கிவிடுவது போலிருந்தது. அழுகை வராமல் கண்களெல்லாம் காய்ந்து போனது போல் இழுத்துக்கொண்டு கிடந்தன! எதையும் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத பதற்றம் என்னை ஆட்கொண்டு கிடந்தது!

     பிறகென்ன?

     மறுநாள் அவரது வீட்டில் நடந்த மரணச்சடங்கில் அமைதியாக தூங்குவது போலிருந்த அவரின் வலது கையை மெதுவாகப் பற்றித் தூக்கினேன். அது இரும்புக்கனமாக இருந்தது. பெருவிரலின் மேற்புறம் சிறிய வட்டமாக தோலும் சதையும் கருகிச் சுருண்டு போயிருந்தது.

     "அதிலை தான் கரண்ட் அடிச்சது" அருகில் நின்றிருந்த அவரின் தங்கை- என் மாமி அழுதவாறே தலையில் அடித்துக் கதறினா.

     அம்மாவும் அப்பாச்சியும் கதறியழும் ஓசை தொடர்ந்து அங்கு கேட்டுக்கொண்டேயிருந்தது.

       காலம் எத்தனையோ சம்பவங்களை தூக்கியெறிந்தபடியும்,  சேர்த்து வைத்தபடியும் தன் கதியில் நகர்ந்து போய்க்கொண்டேயிருக்கிறது!  நாங்கள் தான் அடிக்கடி நின்று அதனை திரும்பிப் பார்க்கிறோம்!

      வாழும் காலம்வரை எங்கள் மீது அன்பும் பாசமும் பொழிந்த சண்முகக் குஞ்சையாவை இன்றுவரை  எப்படி என்னால் மறந்து விட முடியாதோ,  அது போல் காகம் விழுந்து கரைந்ததையும்,  கண்டம் வந்து சேர்ந்ததையும்; கூட என்னால் என்றைக்கும் மறந்து விட முடிவதில்லை!

    

                                                                                        - சந்திரா இரவீந்திரன்


(லண்டனிலிருந்து வெளியாகும் 'சிறுகதை மஞ்சரி' இதழில்  February 2022- வெளியானது)

                                                                                 

   

 

 

  

Comments

Popular posts from this blog

காற்று – சிறுகதை

காத்தவராயரும் இலந்தை மரமும்