காத்தவராயரும் இலந்தை மரமும்
(ஞாபகங்கள் பேசும் )
பருத்தித்துறையில் ஓராங்கட்டைச்
சந்தி என்றால்
தெரியாதவர்கள்
யாரும் இருக்க முடியாது. பருத்தித்துறை
நகரின் மையத்திலிருந்து பிரதான வீதிவழியாக யாழ் நோக்கிப் பயணித்தால்
வரும் முதலாவது மைல் சந்தி அது.
அந்தப் பிரதான முச்சந்திக்கு நிறையக் கதைகள் இருக்கிறது. நகரின்
மேற்கிலிருந்கும் ஊர்களிற்குள் நுழைய
வேண்டியவர்கள் அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொள்ளும் பிரதான சந்தியும் அது தான்.
பெரும்பாலும்
நகருக்குள் பிரவேசிக்கும் புதிய பயணிகளுக்கு ஊர்களின் வழியை அடையாளம் காட்டும் போது இந்த ஓராம்கட்டைச்
சந்தியிலிருந்து தான் வழிக்குறிப்புகள் ஆரம்பமாவது
வழமை. இந்தச்
சந்தியிலிருந்து மேற்கு நோக்கி நீளமாக நகரும் தம்பசெட்டி வீதி வழியாக நடந்தால்
நிறையப் புதினங்களைப்; பார்த்தவாறே ஏராளமான சிற்றூர்களுக்குப் போய்ச் சேரலாம்.
ஓராங்கட்டைச்
சந்தியிலிருக்கும் பென்னம்பெரிய மெத்தை வீடு அப்போது எங்கள்
பெரியபெத்தம்மாவின் (எங்கள் அம்மாவின் பெரியம்மா) வீடு. அங்கே
அவவின் மகன் குடும்பம் இருந்தார்கள்.
பின்னாளில்
அவர்களுக்குச் சொந்தமான வேறு வீட்டிற்கு அவர்கள்
மாறிப்போக, வேறு பல குடும்பத்தினர்
அங்கு வாடகைக்குக் குடியிருக்கத் தொடங்கியிருந்தார்கள். அச்சமயம்
அங்கிருந்த ஒரு குடும்பம் மிஸிஸ்
சின்னத்தம்பி ரீச்சரின் குடும்பம். அவர்கள்
அங்கு குடியிருந்த காலத்தில் அவர்களுக்கு நடந்த ஒரு துயரக்கதை இன்றைக்கும்
என்னால் மறக்க முடியாதது.
அப்போது
83 யூலைக் கலவரத்தில் நாடு முழுவதும் கிலிகொண்டு
கிடந்தது. இலங்கையின் தென்பகுதிகளில் நெடுங்காலமாகக் குடியிருந்த தமிழர்களும், படித்துவிட்டு தென்பகுதியில் போய் வேலை பார்த்துக் கொண்டிருந்த
தமிழர்களும் சிங்களக்காடையர்களால் வெட்டிக்கொல்லப்பட்டும், தமிழர்களின்; வீடுகள், மற்றும் உடமைகள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டும் பெரும் அநியாயங்களும் அக்கிரமங்களும் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்போது
சின்னத்தம்பி ரீச்சரின் கணவர் அநுராதபுரத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அநுரதபுரத்தில்
வைத்து அவர் சிங்களக் காடையர்களால்
கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டமை எல்லோரையும்
பதைபதைக்க வைத்திருந்தது.
சின்னத்தம்பி
ரீச்சர் எனக்கு வடஇந்து சிறுவர் பள்ளியில் தமிழ் படிப்பித்தவர். பின்னாட்களில் வடஇந்து சிறுவர் பள்ளிக்கு உதவித் தலைமை ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டிருந்தவர். நான்
வடஇந்து பெரிய பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது அவரின் மகள்
எனக்கு ரியூட்டரியில் கணக்குப் படிப்பித்துக் கொண்டிருந்தார். இந்தக்
கலவரங்களின் பின்னர் அவரின் மகனொருவர் இளைஞனாக இருக்கும் போதே ஏதோவொரு நோய்
காரணமாக இறந்து போனார். பின்னாளில்
அந்த
வீட்டைக் கடந்து
போகும் தருணங்களிலெல்லாம்; சின்னத்தம்பி ரீச்சர் குடும்பமும், அவவின் கணவரது கொடூர மரணமும் தான் முந்திக்கொண்டு என்
ஞாபகத்தில் வருவதுண்டு.
அந்த
மெத்தை வீட்டைக் கடந்து போனால் அடுத்து நான் உன்னிப்பாகக் கவனித்துச்
செல்வது என்னுடன் படிக்கும் அருள்நங்கையின் வீட்டைத்தான். அருள்நங்கை சின்ன உருவம். புசுபுசுவென்ற
சுருள் முடியுடனும். இரட்டைப்பின்னலுடனும் சிட்டுக்குருவி போல் எந்நேரமும் பறந்துதிரிவாள்.
அவளை நினைத்தால் என் ஞாபகத்தில் ஒரு
விடயம் தவறாமல் வரும். அது
வகுப்பில் ஒவ்வொரு பாடமும் முடிய, அடுத்த பாடத்திற்கான ரீச்சர் வரும் சொற்ப நிமிட இடைவெளிக்குள் வகுப்பிற்கு முன்னாலிருக்கும் முற்றத்தில் இறங்கி, தன் தண்ணீர் போத்தலிலிருந்து
மளமளவென்று தன் இரு கால்
பாதங்களிற்கும் தண்ணீரை ஊற்றிக் கழுவி விட்டு ஓடிவருவாள். அவளின்
கால்கள் எப்போதும் வியர்ப்பதுண்டாம். அதனால் அப்படி ஓடியோடிப்போய் கழுவுவதாக பின்னர் ஒருநாள் சொன்னாள்.
அருள்நங்கையின்
வீட்டைக் கடந்ததும்
வலது புறம் நிலத்தைத் தொட்டபடி காற்றில் அசைந்து கொண்டிருக்கும் நீண்ட விழுதுகளுடனான பென்னம் பெரிய ஆலமரமும், அதனையொட்டியபடி உள்நோக்கி நகரும் சிறு கோயில் ஒழுங்கையும்
தெரியும். வடஇந்து
மகளிர் கல்லூரியின் வேலியோடு
ஒட்டியபடி நகரும் அந்தக் குச்சி ஒழுங்கை பல விடயங்களிற்குப் பெயர்
பெற்றிருந்தது. விழுதுகள்
தொங்கும் அந்த ஆலமரத்தின் கீழ்
வந்து கூட்டமாக நிற்கும் இளம்பெடியளுக்கு அங்கு பல சோலிகள் இருந்தன.
அந்த
வேலியோரம் தான் நாவற்பழக்காரிகள், ஐஸ்பழக்காரன், கரஞ்சுண்டல்காரன்
என எல்லோரும் வந்து நின்று, பள்ளி இடைவேளைகளில் எங்கள் நாக்குகளை தொங்கப்போட வைத்து, மனசை அலையோ அலையென
அலைய வைப்பது!
அந்தக்
குச்சி ஒழுங்கையின் அந்தத்தில்; ஒற்றைக்கூரையின் கீழிருக்கும் தொப்பிளாத்தை வைரவர் கோயிலின் தெற்குப்புறச்சுவரில் கறுப்புநிறக் கரிக்கட்டையால் வரையப்பட்டிருந்த சூலம், நான் சிறுபள்ளியில் ஆறாம்
வகுப்பு முடித்து, எதிரே வீதிக்கு மறுபுறமிருக்கும் வடஇந்து பெரியபள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வரை அப்படியே தான்
இருந்தது. கோவிலின் சிறு வீதியைச்;சுற்றி
மஞ்சள் பட்டு விரித்திருப்பது போல் புளியம்பூக்கள் எப்போதும்
சிதறிக்கிடக்கும். எங்களது
ஐந்தாம் வகுப்பு அந்த தொப்பிளாத்தை வைரவர்
கோவில் வளவின் வேலியை அண்மித்தேயிருந்தது. வகுப்பிற்குள் புளியம்பூக்கள் காற்றோடு வந்து விழுவதுமுண்டு. மேசையில் வந்து விழும் பூக்களை மெதுவாக எடுத்து வாய்க்குள் போட்டுவிடுவோம். அவற்றைச் சாப்பிட்ட மறுகணமே பசி வயிற்றைக் கிளறத்
தொடங்கிவிடும்.
பெரிய
வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்த நேரம், ஓராங்கட்டைப் பக்கமாக ரியூசன் வகுப்புகளுக்குப் போய் வந்த காலங்களில்
வகுப்புத் தோழிகளோடும் சரி, தனியாகவும் சரி,
அந்தக் குச்சி ஒழுங்கையைக் கடக்கும் போதெல்லாம் கால்கள் ஏனோ, தானாகவே பின்னிக்கொள்ளும்.
மனதினுள் அலைந்து கொண்டிருக்கும் எல்லா நினைவுகளும் அக்கணம் பொசுக்கென்று காணாமல் போய்விடும். கைகள்
தானாகவே கூப்பிக்கொள்ளும். கண்கள்
பயபக்தியுடனும், ஒருவித பயத்துடனும் மூடிக்கொள்ளும்.
அந்தக்
கோயிலைக் கடந்துவிட்டால் போதும். அதற்கப்புறம்
மனதையும் செயலையும் கட்டுப்படுத்துவதற்கு யாருமில்லையென்னும் தைரியத்தில் அது தன் எண்ணத்திற்கு
இறக்கை கட்டிப் பறக்கத்தொடங்கிவிடும்.
வைரவர்,
காத்தவராயர், வீரபத்திரர், காளியம்மன் என ஒரு லிஸ்ற்
இருக்கிறது. அதில்
உள்ளவர்களைக் கண்டால் உள்ளுக்குள் எல்லாம் அடங்கியொடுங்கி விடும்! அது
ஏனென்று இன்று வரை காரணம் தெரியாது.
காதால் கேட்டுக் கேட்டு உள்ளுக்குள் சேர்த்து வைத்திருந்த கதைகள் அப்படி என்று நினைக்கிறேன்.
பள்ளிக்கூடம்
விட்டவுடன் வகுப்பிலிருந்து
ஓடிவந்து, வெளி விறாந்தாவிலிருந்து முற்றத்தில் குதித்து,
பூந்தோட்டத்தைத் தாண்டி ஓடிப்போய் பென்னம்பெரிய இரும்புக்கதவை இடித்துத் தள்ளிக்கொண்டு முதல் ஆளாக வீதியில் இறங்கிவிடுவதில்
ஒரு பெருமை. பின்னர்
தம்பசெட்டி வீதி வழியாக மேற்கு
நோக்கி நீளமாய் நடந்து, வலது புறம் வரும்
கல்லூரி வீதிக்குத் திரும்பி, ஆத்தியடிப் பிள்ளையார் கோவில் பக்கமிருக்கும் எங்கள் வீட்டைப் பார்த்து நடையைக் கட்டுவது தினசரி நிகழ்வு.
பள்ளிக்கூடத்திற்கும்
வீட்டிற்கும் இடையிலான அந்தப் பகுதியில் தான் அந்நேரம் எங்கள்
வாழ்க்கை ஒளி நிறைந்து, சுவாரஸ்யம்
பெற்றிருந்தது. அது ஆசிரியர்களின் கண்களுக்கும்,
அம்மாவின் கண்களுக்கும் தெரியாத ஒரு சொர்க்கலோகப் பாதை!
அங்கு
சுதந்திரத்தை நாங்களாகவே பிடித்து எங்கள் கைகளிற்குள்ளும் கால்களிற்குள்ளும் பதுக்கி வைத்திருந்தோம்.
பள்ளிக்கூடம்
விட்டு வெளியில் வந்தவுடன் எதிரில் தெரியும், வடஇந்து சிறுவர் பள்ளிக்கூடத்தின் வேலியை ஒட்டியபடி வடக்கே கடற்புறமாக நகர்ந்து போகும் வெள்ளவாய்க்கால் 'பிறேமா தேயிலை' வீட்டின் பின்மதிலையும் ஒன்று சேரத் தொட்டுக்கொண்டு; அப்படியே பாவட்டம் பற்றைகள் நிறைந்த அரைகுறை இருளுக்குள் நழுவி மறைந்து போகும். அது
எங்கு போய் முடிகிறதென யோசி;த்தபடியே தினமும் நானந்தச் சிறு மதவைக் கடந்து
போவேன்.
“அது
வி.எம் றோட்டிலை இருக்கிற
அப்பா கடைப் புளியமரத்து மதவுக்குக் கீழால் ஆத்தியடிப்பிள்ளையார் கோயில் பக்கமாப் போகுதடி” என்று றஞ்சி சொல்லுவாள்.
“அதுக்குப்
பிறகு எங்கை போகுது?” என்று நான் யோசித்தவாறே கேட்டால்
“ஆத்தையின்ரை சீலைக்குள்ளை போகுது பேசாமல் வா..” என்று றஞ்சி என் வாயை அடைத்துவிடுவாள்.
பிறேமா
தேயிலை வீட்டின் முகப்பைத் தொட்டுக்கொண்டு போவது அந்த விநாயக முதலியார்
வீதிதான். அதைத்தான்
வி.எம் றோட் என்று
சுருக்கிச் சொல்லுகிறார்கள். அது
வடக்கு நோக்கி நீளமாய் வளைந்து, நெளிந்து ஏறியிறங்கிப் போய், பருத்தித்துறை துறைமுகத்தோடு முடிவடைந்து விடும்;.
இந்தப்
புதினங்களைத் தாண்டிவிட்டால் பள்ளிக்கூடச் சத்தங்கள், ரீச்சர்மாரின் கண்காணிப்புகள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத்தொடங்கிவிடும். அதற்குப் பிறகு ஒரு குருவிக்கும் பயப்படாமல்
கைவீசி, மனம் போன போக்கில்
நடக்கத் தொடங்கிவிடலாம். போகிற
வழியில் வரும் ஒரு வீட்டில் வாடகைக்கு
வந்து குடியிருக்கும் கணக்கு ரீச்சர் மிஸஸ் கணபதிப்பிள்ளை அவர்களின் வீட்டையும் தாண்டி விட்டால் மிச்சசொச்சப் பயங்களையும் காற்றில் வீசியெறிந்து விடலாம். அதற்குப்
பிறகு உலகம் எங்கள் கைகளில் தான்!
கணபதிப்பிள்ளை
ரீச்சர் வீடு, அதே வீதியில் அடுத்துவரும்
இன்னுமொரு மதவோடு ஒட்டியபடி இருக்கும். அந்த
மதவிற்குக் கீழாக ஓடும் வெள்ளவாய்க்கால், பற்றைகள்
நிறைந்து எப்போதும் இருளாகவேயிருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை குப்பைகள், பீங்கான்
துண்டுகள், கடுதாசிகள் நிரம்பிக்கிடப்பது தெரியும்.
ரீச்சரின்
வீட்டையும், காத்தவராயர்
கோயிலையும் கிழித்துக்கொண்டு நகரும் வெள்ளவாய்க்கால், ஆத்தியடிப்பிள்ளையார்
கோயில் வரை சென்று 'சந்தியாங்கிணற்றை' தொட்டுக்கொண்டு போய், ஈற்றில் இந்துசமுத்திரப் பெருங்கடலில் விழுந்து மறைந்து போகும்.
காத்தவராயர்
கோயிலைச் சுற்றி முள்வேலி போடப்பட்டிருக்கும். கோயில்
வளவு ஒரு பள்ளக்காணிக்குள் இருந்தது.
தார் வீதியிலிருந்து குதித்து இறங்கினால் தான் கோயிலடிக்குப் போகலாம்.
ஒற்றைக்
கூரையின் கீழிருக்கும் அந்தச் சின்னஞ்சிறு கோயில் கிழக்குப் பார்த்தபடி வெள்ளவாய்க்காலை நோக்கியிருக்கும். கோயிலின்
வடக்குப்புறமிருக்கும் முள்வேலியைத் தாண்டினால் ஒரு குச்சு ஒழுங்கை.
அந்த
ஒழுங்கைக்கு அப்பால் இருப்பது தீனா அக்காவின் வீடு.
தீனா
அக்காவும், ஜேம்ஸ் அண்ணாவும் ஒருவரையொருவர் பயங்கரமாகக் காதலித்துக் கொண்டிருந்தது ஊரறிந்த விடயம். ஆனாலும்
ஊரறியாத விடயமொன்றும் இருந்தது. அது
எங்களுக்கு மட்டும் தான் தெரியும். அவர்கள்
தினமும் இரகசியமாய் சந்திப்பது இந்தக் காத்தவராயர் கோயிலோடு ஒட்டியிருக்கும் பென்னம்பெரிய புளியமரத்திற்குக் கீழே என்பது தான்
அது.
காத்தவராயர்
கோயில் வளவிற்குள் நாங்கள் இறங்குவது இலந்தைப்பழத்திற்காக மட்டும் தான் என்றாலும் இத்தகைய
புதினங்கள் நாம் எதிர்பாராமலே எமக்கு
இலவசமாகக் கிடைப்பவை.
கோயில்
மூலஸ்தானத்துக்குப் பின்னாலிருக்கும் சடைத்துப் பருத்த, பெரிய இலந்தை மரமும், கோயிலின் முன் வாசலுக்கு நேரெதிரேயிருக்கும்;
உயரமான, மெலிந்த இலந்தை மரமும் தான் எப்போதும் எங்களது
இலக்காக இருக்கும். இரண்டு
மரங்களின் இலந்தைப்பழங்களும் வெ வ்வேறு சுவைகளைக் கொண்டவை. பின்னாலிருக்கும்
சடைத்த மரத்தை உலுப்பினால் கொழுத்த சதைப்பிடிப்பான இலந்தைப்பழங்கள் பொலபொலவென்று கொட்டும். நானும்,
அக்காவும் றஞ்சியும் எமது சட்டையின் கீழ்விளிம்பை
மடித்துப் பிடித்தபடி மளமளவென்று பொறுக்கி அதற்குள் நிரப்புவோம். அவற்றின்
செங்காய்கள் தான் எனக்குப் பிடித்தமானவை.
அவற்றை
உலுப்பும் போது அல்லது கற்களால்
குறிபார்த்து எறியும் போது நொழுநொழுவென்று நசியும்
பழங்கள் கொட்டினால் அவற்றை நான் றஞ்சியிடம் கொடுத்து
விடுவேன். செங்காய்கள்
கொட்டினால் அவற்றை றஞ்சி எனக்குத் தந்துவிடுவாள்.
கோயிலுக்கு
முன்னாலிருக்கும் மரத்தை உலுப்பினால் அருமையாக சில காய்கள் மட்டுமே
கொட்டும். அவை
வேப்பம்பழ வடிவில் நீள்உருண்டையாக இருக்கும்,
ஆனால் அவற்றின் சுவையோ தனி. மெல்லிய துவர்ப்பும்,
மெல்லிய புளிப்பும், இனிப்பும் கலந்த மாக்கலவை போல் ஒரு அபூர்வ
சுவை. ஆனால்
அந்த மரத்திற்குக் கல் எறியும் போது
றஞ்சி எப்போதும் சொல்வாள் “காத்தவராயர் எங்களையே முழுசிப் பார்த்துக்கொண்டிருக்கிறார், கெதியா எறிஞ்சு விழுத்தடி” என்று. நான்
கண்களை மூடிக்கொண்டு கல்லை எறிவேன்.
எனக்கு
காத்தவராயர் கோயிலின் முன்பக்கம் போய் தனியாக நிற்பதற்கு
மனதிற்குள் தைரியம் இருப்பதில்லை. ஆனால்
அதை யாருக்கும் சொல்லவும் விருப்பமில்லை. அதனால்
முன்புறம் நிற்கும் இலந்தை மரத்திலிருந்து இலந்தைப் பழங்களை விழுத்துவதற்காக எப்போதும் அக்காவையும் றஞ்சியையும் வருந்தியழைத்துக் கொண்டிருப்பேன்.
நானும்
அக்காவும் றஞ்சியும் பள்ளிக்கூடம் முடிய நேரே வீட்டுக்குப் போகாமல்
இடையில் இந்தக் காத்தவராயர் கோயில் வளவிற்குள் இறங்கி இலந்தைப்பழம் பிடுங்குகிறோம் என்று கேள்விப்பட்ட அம்மா, ஒருநாள் எனக்கும் அக்காவுக்கும் சுழரச்சுழர பூவரசம் கம்பால் சவுள் அடி தந்தா. அம்மா
அடித்த அடியில்; கம்பு நார்நாராகக் கிழிந்து தொங்கியது. நான்
இனிமேல் இலந்தைப்பழம் பிடுங்கப் போகமாட்டேன் என்று கத்தியழுதவாறே அம்மாவிடம் சத்தியம் வேறு செய்து விட்டேன்.
அம்மாவிடம்
வாங்கிய அடிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் நல்ல பிள்ளைகளாக பள்ளி
முடிந்ததும் நேரே வீடு தான்.
இரண்டு
கிழமை கழிய பழையபடி இலந்தைக்காய்களினதும்,
பழங்களினதும் சுவை எங்களை சரசரவென
இழுக்கத்தொடங்கி விட்டது. பிறகென்ன,
ஒரு நாள் ஓடியோடி அவசரமாய்
இலந்தைகளை பொறுக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
பிறகு மெதுமெதுவாக இலந்தை மரங்களின் கீழ் செலவழிக்கும் நேரம்
அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. பழையபடி அம்மா கேள்விகள் கேட்கத் தொடங்கிவிட்டா. ஏன்
வீடு வரத்தாமதமாகிறதென்ற சந்தேகம் அம்மாவுக்கு வலுக்கத் தொடங்கிவிட்டது. நாங்கள்
பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் நடக்கும் சாரணர் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, நடனப்பயிற்சி என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை மாற்றிமாற்றிச் சொல்லி சமாளித்து விடுவோம்.
பின்னேரம்
3.45க்கு பள்ளிக்கூடம் முடிந்து விடும். அன்று
உண்மையாகவே விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி இருந்தது. நாங்கள்
அதனை முடித்துக்கொண்டு காத்தவராயர் கோயில் வளவிற்குள் இறங்கிய போது ஐந்தரை மணிக்கு
மேலாகி விட்டது. பயிற்சிகள்
முடிந்த பின்னரான களைப்பும், பசியும் தீர, குசாலாக இலந்தை
மரத்தடி நோக்கி நடந்தோம். அன்றைக்கு இலந்தை மரத்தடி இலேசாக இருண்டு கிடந்தது. ஒரு விதமான குளிர்காற்று
வீசிக்கொண்டிருந்தது. கோயில் முன்மண்டபத்தில் யாரோ விளக்கேற்றி வைத்திருந்தார்கள்.
தீபம் காற்றில் அங்குமிங்கும் அலைந்தலைந்து ஒளிர்ந்து கொண்டிருந்தது.
அன்றைக்கு
நாங்கள் மரத்தை உலுப்பாமலே நிறைய இலந்தைப்பழங்கள் நிலத்தில் கொட்டிக்கிடந்ததைப் பார்க்க அதிசயமாகவும் சந்தோசமாகவும் இருந்தது. நானும்
அக்காவும் றஞ்சியும் ஓடியோடி பொறுக்கியெடுத்து எங்கள் பள்ளிப்பைகளில் நிரப்பிக் கொண்டோம். பொறுக்கும் போது கைகளுக்குள்ளிருந்து தவறி விழுந்தால்,
மற்ற ஆள் அதனை லபக்கென்று
பொறுக்கி விடுவதும், அதற்காக வாக்குவாதப்படுவதும் எப்போதும் போல் அப்போதும் நடந்து
கொண்டிருந்தது.
நான் இலந்தைப் பழங்களை
பொறுக்கிக் கொண்டு நிமிரும் போது வெளியில் தார்வீதியோரம்;
யாரோ சைக்கிளை மெதுவாக உழக்கியபடி காத்தவராயர் வளவை நோட்டம் விடுவது
தெரிந்தது. யாரவர் என்று உற்றுப்பார்த்த போது நெஞ்சுக்குள் பகீரென்றது!
அது
எங்கள் அப்பா. என்
கண்களையே என்னால் நம்பமுடியாமலிருந்தது. அப்பா
கொழும்பிலிருந்து எப்படி சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்தார் என்ற வியப்பு ஒருபுறம்.
காத்தவராயர்
வளவிற்குள் நின்று நானும் அக்காவும் இலந்தைக்காய் பொறுக்குவதைக் கண்டுவிட்டார் என்ற பதற்றம் இன்னொருபுறம்.
தார்வீதிக்கரையில்
சைக்கிளை மெதுவாக ஓடிக்கொண்டு போன அப்பா எங்களைக்
கண்டதும் சைக்கிளை நிறுத்தி, ஒரு காலை நிலத்தில்
ஊன்றியபடி “என்ன செய்யிறியள் உங்கை?
கெதியா வீட்டுக்கு வாருங்கோ..” என்று ஒருவிதமான அதட்டல் குரலில் உரத்துக் கூறிவிட்டு அப்படியே மறைந்து போனார்.
அப்பா
கொழும்பிலிருந்து பயணத்தால் வந்து, உடைகள் மாற்றி, வேஷ்டி உடுத்துக்கொண்டு நிதானமாகத் தான் எங்களைத் தேடி
வந்திருக்கிறாரென்று விளங்கியது.
ஆனால் எதற்காக திடும்மென்று இப்படி ஊருக்கு வந்தார் என்பது மட்டும் எனக்கு விளங்கவில்லை. ஆனால்
அது அக்காவுக்கு விளங்கியிருக்குமென்று பல நாட்களுக்குப் பிறகு
தான் எனக்குப் புரிந்தது.
வழமையாக
அப்பா ஊருக்கு வருகிறாரென்றால் அதுபற்றி ஒரு மாதத்திற்கு முன்பே
கடிதமூலம் எங்களுக்குத் தெரிவித்துவிடுவார். நாங்கள்
பள்ளி முடிந்து வீடு நோக்கி வரும்போது,
ஆத்தியடிப்பிள்ளையார் கோயில் சந்தியையும் தாண்டி, அப்பாவின் வாசனை என் மூக்கைத் துளைக்கத்
தொடங்கிவிடும். அப்பா
கொண்டு வரும் அன்னாசி, றம்புட்டான், மங்குஸ்தான், லாவுடு, விளாம்பழம், அதனோடு சேர்ந்து அப்பா பூசும் யாட்ழி பவுடர் என எல்லாம் கலந்த
ஒருவித அபரிதமான வாசனையது. அது அப்பாவுக்கேயுரிய வாசனை!
அந்த வாசனையை நான் அடையாளம் காணும்போதெல்லாம்
என் நெஞ்சு சந்தோசத்திலும் பதற்றத்திலும்; படபடக்கத் தொடங்கிவிடும்! அப்பா
மீண்டும் பயணம் போகும் வரை அந்த வாசனை
எங்கள் வீடெல்லாம் நிறைந்திருக்கும்.
இப்போ
அப்பா எதற்காக இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்தார் என்ற யோசனை எனக்கு.
அப்பாவைக்
கண்டதிலிருந்து அக்கா திகைத்துப்
போய் நின்றிருந்தா. றஞ்சியும்
பயந்து போய் உடனேயே வீடு
நோக்கி புறப்பட ஆயத்தமானாள். வழமையாக றஞ்சி எங்களுடன் சேர்ந்து வந்து ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் சந்தியில் பிரிந்து, சந்தியாங்கிணற்றுப் பக்கமிருக்கும் அவளின் வீடு நோக்கிப் போவாள்.
ஆனால்
அன்றைக்கு எங்கள் அப்பாவை கண்டுவிட்ட பயத்தில் றோட்டுப்பக்கம்
வராமல் கம்பி வேலியைப் பிரித்து, தலையை வெளியே தள்ளி, உடலைக் கோணலாக வளைத்து வெள்ளவாய்க்காலிற்குள் இறங்கிவிட்டாள். அதன் வழியாக பற்றைகளைப்
பிரித்துக்கொண்டு சந்தியாங்கிணற்றுப் பக்கம் ஓடியோடி நடக்கத் தொடங்கினாள். அவளின் அந்தச் செய்கை எனக்கு உள்ளுர ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவது போலிருந்தது.
“அடியேய்..
இருண்டு போச்சு உந்தப் பத்தைக்குள்ளாளை தனியாப் போகப்போறியே?” நான் பதற்றத்துடன் கேட்டேன்.
அதற்கு
அவள் “ச்சே...எனக்கு அதுக்கெல்லாம் பயமில்லை போடி..” என்று சொல்லியவாறே விடுவிடென வெள்ளவாய்க்கால் ஊடாக நடந்து கொண்டு
போய் அப்படியே மறைந்து விட்டாள்.
நானும் அக்காவும் அப்பாவின் தலைக்கறுப்பு தெரிகிறதா என்ற பயத்தோடு வீதிப்பக்கம்
திரும்பிப் பார்த்தோம். வீதி
வெறிச்சோடிப்போயிருந்தது.
அப்பா
வழமையாக எங்களுக்கு அடிப்பதில்லை. எப்போவாவது அருமையாக வீட்டுக்கு வருபவர் எங்களுடன் செல்லமாகவும் அன்பாகவும் தான் இருப்பார். அடி
தருவதில் நம்பர் வன் எங்கள் அம்மா
தான். பொய் சொல்லக்கூடாது, களவெடுக்கக்கூடாது,
பெரியவர்களை மதிக்க வேண்டும், அம்மா சொல் தட்டக்கூடாது எனப்
பல போதனைகள் அம்மாவிடமிருக்கிறது. அவற்றில் ஏதாவதொன்று சிறிதாகத் தவறினாலும் பூவரசம்தடி பிய்ந்து சிதறிவிடும். அம்மா
இப்படிக் கடும் கொள்கைகள் வைத்திருப்பதும் அதற்காக எங்களுக்கு அடிப்பதும் அப்பாவுக்கு மனசிற்குக் கஷ்டமான விசயம்.
“பிள்ளைகளை
ஏன் அடிக்கிறீர்” என்று அப்பா சற்றே மனம் நொந்து கேட்பதை
சில சமயங்களில் கண்டிருக்கிறேன். ஆனால்
அன்றைக்கு அப்பாவே எங்களுக்கு தலைகால் தெரியாமல் அடித்துவிடுவாரோ என்று உள்ளுர ஒரே பயமாக இருந்தது.
அப்பாவின்
கோபத்தை நான் ஓரிரு தடவைகள்
தான் கண்டிருக்கிறேன்.
ஆனால்
அந்தக் கோபம் அப்பாவின் கண்களிலிருந்து புறப்படும் போதே நான் உள்ளுக்குள்
முழுமையாகச் சிதைந்து விடுவேன். அதற்குப்
பின் என் உடல் என்
கட்டுப்பாட்டுக்குள் இருப்பதில்லை. தன்பாட்டில்
உதறத்தொடங்கிவிடும். கால்களின்
மேற்பாகம் நடுங்கத்தொடங்கிவிடும்!
திடீரென்று
“வதனா அக்கா.... முனி..” என்ற றஞ்சியின் அலறல்
பற்றைகளைப் பிய்த்துக்கொண்டு வந்து எங்கள் காதுகளில் அறைந்தது. என்
கைகளில் இருந்த இலந்தைப் பழங்கள் சிதறிக் கீழே விழுந்தன. நான்
ஓட ஆயத்தமானேன். அக்கா
முழுசிக்கொண்டு நின்றிருந்தா.
“என்ன
முழுசிக்கொண்டு நிக்கிறியள்? றஞ்சியை முனி அடிச்சிட்டுது போலை..”
நான் சத்தமாக அக்காவை அதட்டியபடியே ஓடிப்போய் தார்வீதியில் ஏறிநின்றேன். அக்காவும்
பயந்துகொண்டது போல் அவசரமாக நடந்து
வந்து வீதியில் ஏறினா. இருவரும்
வீடுநோக்கிப் போகும் போது எனக்கு அப்பா
பற்றிய பயம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
கூடவே
றஞ்சியின் நிலை என்ன என்றும்
மனதிற்குள் ஒரே யோசனையாக இருந்தது.
வீட்டிற்குப்
போனவுடன் அப்பா “வாங்கோ வாங்கோ.. உங்கள் ரெண்டுபேரையும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறன்..” என்று இலேசான நக்கலுடனும் கோபத்துடனும் தலையை ஆட்டியவாறே தன்னருகில் அழைத்தார்.
'சரி இண்டைக்கு அப்பாவின்
உரமான கைகள் எங்கள் முதுகை பதம் பார்க்கப் போகிறது..'
என்று நான் உள்ளுர நினைத்துக்
கொண்டு அதற்காக என்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு நின்றிருந்தேன்.
ஆனால்
அப்பா எடுத்த வீச்சில் அக்காவின் பக்கம் திரும்பி, கேள்விக்கணைகளைத் தொடுத்தார். அது
அக்காவின் காதல் தொடர்பான கேள்விகள்.
“எதுக்கு
இலந்தைக் காணிக்கு தங்கச்சியையும் கூட்டிக்கொண்டு போனனி?”
“இல்லை..அவள் தான் என்னை
வரச்சொல்லிக் கேட்டவள்.. “
“அவள்
கேட்டால் நீ போவியோ?”
“பாவமாயிருந்திது.
அதுதான் போனனான்”
“ஆரங்கை
வந்தது..?”
“ஒருத்தரும் வரேல்லை..” அக்காவின் பதில் அவவுக்கே முனியடிச்ச மாதிரி வெருண்டுபோய் வெளியில் வந்தது.
“உண்மையைச் சொல்லு. இல்லையெண்டால் நானாகக் கண்டுபிடிப்பன்..”
“..............”
அப்பாவின்
கேள்விகளுக்குப் படபடவென்று பதிலளித்த அக்கா, கடைசிக்கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற போது அப்பாவை விட
அதிகம் திகைத்துப் போனது நான் தான்.
இப்போது
அப்பா என் பக்கம் திரும்பினார்.
“நீ...உண்மையைச் சொல்லு.
வேற ஆரும் அங்கை வந்தவையோ?”
“இல்லையப்பா.
றஞ்சி மட்டும் தான் எங்களோட வந்தவள்?”
நான்
பௌவியமாகவும் பணிவுடனும் எனக்குத் தெரிந்த உண்மையான பதிலைச் சொன்னேன்.
“அவளைத்
தவிர வேற ஒருத்தரும் வரேல்லையோ?”
“இல்லையப்பா. அப்பிடி ஆரையும் நான் காணேல்லை. ஆனால்
றஞ்சி வெள்ளவாய்க்கால் வழியா வீட்டுக்குப் போகேக்கை, முனியைக் கண்டு கத்தின சத்தம் பெரிசாக் கேட்டது..” எனக்கு நாக்குளறியது.
“முனியைக் கண்டவளோ?” அப்பா நெற்றியைச் சுழித்துக்கொண்டு கேட்டார்.
“ஓம். அவள் வெள்ளவாய்க்கால்
வழியா நடந்து போகேக்கை 'முனி.. எண்டு பயந்து குளறின சத்தம் எங்களுக்குக் கேட்டது. பிறகு நாங்கள் ஓடி வந்திட்டம்..” எனக்கு
பயத்தில் நாக்குளறுவது இன்னமும் நிற்காமலிருந்தது.
அப்பா
வெடுக்கென்று திரும்பி அக்காவை ஒருமாதிரிப் பார்த்தார். பிறகு என்னைப் போய் உடுப்பை மாற்றி
முகத்தைக் கழுவச் சொல்லி அனுப்பிவிட்டார். அக்கா
அப்படியே அப்பாவுக்கு முன்னால் ஒருமாதிரி நெளிந்து கொண்டு வெருண்டு போய் நின்றுகொண்டிருந்தா. பிறகு அப்பாவின்
விசாரணைகளில் அம்மாவும் சேர்ந்து கொண்டது கிணற்றடியில் முகம் கழுவிக்கொண்டிருந்த எனக்கு சாடையாகத் தெரிந்தது.
நான்
படிப்பதற்கு மேசைக்கு வந்த போது அக்காவின்
கண்கள் அழுது வீங்கியிருப்பது தெரிந்ததும் எனக்கு ஒரே பதற்றமாக இருந்தது.
அவவைப்
பார்க்கப் பாவமாகவும் இருந்தது. இலந்தைக்காய்
பொறுக்கப் போனதற்காக அக்காவுக்கு மட்டும் அடி விழுந்திருக்கிறது என்பதில் எனக்கு
அக்கா மேல் தாங்க முடியாத
இரக்கமாக இருந்தது. அக்கா
பாவம் என்று உள்ளுரப் புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனாலும்
நான் அடியிலிருந்து தப்பி விட்டேன் என்பதில் ஒரு பெரிய ஆறுதல்
தான்.
றஞ்சிக்கு வெள்ளை முனி அடித்து, மூன்று
நாட்களாகக் காய்ச்சல் காய்ந்து, பிறகு முதலிபேத்தி அம்மனுக்கும், காத்தவராயருக்கும் ஒரே நாளில் றஞ்சியின்
அம்மா நல்லெண்ணெய் கொடுத்து விளக்கேற்றி, அவளுக்கு
நூல் கட்டி விட்டதாகவும் ஊரெங்கும் கதை பரவியிருந்தது. றஞ்சி
இரண்டு நாட்கள் பள்ளிக்கு வராமல் இருந்தாள். அதனால்
பள்ளிக்கூடத்திலும் அந்தக்கதை பரவியிருந்தது.
அதெல்லாம்
நடந்து பல மாதங்களுக்குப் பிறகு
தான் எனக்குத் தெரிந்தது:-
அப்பா ஏன் சொல்லாமல்
கொள்ளாமல் திடுதிப்பென்று பயணத்தால் வந்திருந்தார்? அவர் எங்களைத் தேடி
நேராக ஏன் இலந்தைக்காணிப்பக்கம் வந்தார்? இலந்தைக்
காணிக்குப் போனதற்கு ஏன் எனக்கு மட்டும்
அடிவிழவில்லை? றஞ்சியைப் பயப்படுத்திய அந்த
வெள்ளை முனி எது?
அந்த
சம்பவத்திற்குப் பிறகு நான் என்றைக்கும் காத்தவராயர்
கோயில் வளவிற்குள் இறங்கினதேயில்லை. போகிற வழியில் நெஞ்சைத்தொட்டு பக்தியாகக் கும்பிட்டுவிட்டு நடையைக் கட்டிவிடுவேன்!
சந்திரா இரவீந்திரன் -லண்டன்
(இலண்டனிலிருந்து வெளியாகும் 'சிறுகதை மஞ்சரி' 2021ஆவணி இதழில் வெளியானது)

Comments