பெயர் தெரியாதவன்
மூன்று நாட்களாக அவனைக் காணவில்லை!!!
போகும் போதும் வரும் போதும் பார்க்கிறேன். அவன் இல்லை.
அவன் இனி வரமாட்டான் போலும்.யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒருவித துயரம் மனதை முட்டி நிற்கிறது!
ஒரு வெயில் நாள் அது. அவசரமாக நான் வேலைத்தளத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கும் போது அவன் அந்த வெளிச்சுவரோரம் அமைதியாக உட்கார்ந்திருப்பது தெரிந்தது. எங்கோ ஒரு தொலைவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
முகம் முழுவதும் பல மாதங்கள் மழிக்கப்படாத தாடி! நீண்டு வளர்ந்த தலைமுடி. தடித்த உதடுகளை இறுக மூடியபடி உட்கார்ந்திருந்தான்.
மிக மோசமான அழுக்குப் படிந்த உடைகளை அவன் அணிந்திருந்தான். கண்களிற்குள் துயரமும் சலிப்பும் நிறைந்து கிடந்தது! ஐம்பந்தைந்து வயதைக் கடந்திருப்பான் என்று தோன்றியது.
அவனைக் கடந்து நான் வேலைத்தலத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நாட்களும் அவன் எனக்கு 'குட்ஈவினிங்' சொல்லி சலாம் வைக்கிறான். வேலை முடிந்து வெளியே வரும் போது 'குட்நைட்' சொல்லி அதே சலாமை மறக்காமல் வைக்கிறான். அங்கு வருவதும் போவதுமாக இருக்கும் ஆயிரக்காணக்கான வாடிக்கையாளர்களுக்குள் என் தலைக் கறுப்பைக் கண்டதும் உசாராகி, ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் புன்னகையை அவன் உதிர்க்கிறான்.
நாட்கள் செல்லச் செல்லச் அவனைக் கடக்கும் போதெல்லாம் ஒருவித நெடி வீசத் தொடங்கியது! அவன் குளித்தும் உறங்கியும் பலநாட்களாக இருக்குமென்று தோன்றியது.
இலண்டனின் குளிர் காலங்களைப் பற்றிச் சொல்லும் போதே உதடுகள் உறைந்து விடுவது போல் பிரமைதோன்றும் போது, அவனோ கிடுகிடுவென்று உடல் நடுங்க, குறுகிச் சுருண்டபடி, பழைய அழுக்குப்படிந்த துணிகளினால் தன்னை இறுக மூடிக்கொண்டு வெளிச்சுவரின் ஒரமாகக் கால்களைக் குத்திட்டு அமந்திருப்பான்.
அங்கு வரும் சில வாடிக்கையாளர்கள் தாம் கொள்வனவு செய்த பொருட்களை தமது வாகனங்களில் ஏற்றி விட்டு, தள்ளுவண்டிலை நிறுத்துமிடத்தில் கொண்டு வந்து விடும் போது அதற்குள் போட்டிருக்கும் ஒரு பவுண் குற்றியை இவனின் கைகளில் வைத்து விட்டுப் போவார்கள்.
அந்த வண்டில்களை அவர்கள் எடுக்கவும் பின்னர் நிறுத்தவும் அவன் இயலாமையுடன் பிரயத்தனப்பட்டு உதவி செய்ய முற்படுவான். அவனிலிருந்து வீசத்தொடங்கியிருந்த அசுத்த நெடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அந்த உதவி தமக்கு வேண்டாம் என்று பலரும் சொல்லி விடுவார்கள்.
இத்தனைக்கும் நான் வேலைக்கு உள்நுழையும் போதும் வேலை முடிந்து வெளியேறும் போதும் எனக்கு உற்சாகமாக சலாம் வைப்பதை மட்டும் அவன் எப்போதும் மறந்து விடுவதில்லை.
ஒருநாளிரவு யாரோ பெருங்குரலெடுத்து அழும் ஓசை கேட்டு வேலைத்தலத்திலிருந்த நானும் சக ஊழியர்கள் சிலருமாக வாயிலை நோக்கி ஓடி வநதோம். அவன் தான் அழுது கொண்டிருந்தான். கண்ணிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தோட அவன் நின்ற நிலையில் தலையை சுவரில் மோதி மோதி அழுது கொண்டிருந்தான்.
எல்லோரும் இரக்கத்தில் மனம் உடைந்து போக என்ன பிரச்சனை என்று வினாவினார்கள். தலையை மோத வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
அவன் பதிலுக்கு அழுதவாறே ஏதோ சொல்கிறான். அவனின் துயரம் நெஞ்சைப் பிசைகிறது. ஆனால் அவனின் மொழியை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
என் மனம் உள்ளுக்குள் பதறிக் கொண்டிருந்தது. அவனின் துயரத்தை அறியமுடியாமலும் அதனைத் தீர்க்க முடியாமலும் தத்தளித்துக் கொண்டிருந்தேன். நாம் சில வாடிக்கையாளர்களை மறித்து, அவனது மொழி புரிகிறதா என்று; வினாவிப் பார்த்தோம். யாருக்கும் அது என்ன மொழி என்று புரியவில்லை.
ஒருவன் அது 'இத்தாலியப் பாஷை' என்றான். ஒரு இத்தாலிக்காரன் அது "இத்தாலியப் பாஷை இல்லை" என்றான்.
ஒருவன் அது "ருமேனியப் பாஷை" என்றான். ஓருவன் அது இல்லை என்றான்.
ஒருவன் அவன் "பிரெஞ்ச் கதைக்கிறான்..." என்றான். இன்னுமொருவன்
அது "பிரெஞ்ச் இல்லை'"என்றான்.
என் சக ஊழியப் பெண்ணொருத்தி கருணை பொங்க, தன் பொக்கற்றிலிருந்த பிஸ்கற் பக்கெற்றை அவனிடம் கொடுத்தாள். அவனோ அதனை வாங்க மறுத்து தொடர்ந்தும் தலையை சுவரில் மோதிப் புலம்பி அழுது கொண்டேயிருந்தான்.
எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் தலையைத் தொங்கப் போட்டபடி மௌனமாக உள்ளே நுழைந்து வேலையைத் தொடரத் தொடங்கினோம். நேரம் செல்லச் செல்ல எல்லோரும் அதனை மறக்கத் தொடங்கி விட்டார்கள் என்று தெரிந்தது. சக ஊழியர்கள் மும்முரமாகத் தத்தமது வேலைகளில் மூழ்கிவிட்டிருந்தார்கள்.
ஆனால் என்னால் எதையும் சரிவரச் செய்ய முடியாமல் இருந்தது. மனதிற்குள் ஏதோவொரு பாறாங்கல் இறங்கிக் கொண்டு அழுத்துவது போலிருந்தது.
பின்னணியில் மெதுவாக ஒலித்துக் கொண்டிருக்கும் பியோன்சியின் அழகான ஆங்கிலப் பாடல்களில் சக ஊழியர்கள் தம்மை மறந்து இனி அப்படியே புதைந்து விடுவார்கள்.
ஆனல் நானோ எதற்குள்ளும் புதைந்து கொள்ள முடியாமல் வெளியிலும் உள்ளுமாய் கிழிந்து போய் அரைகுறையாக உட்காhந்திருந்தேன். கைகள் தன் வேலையை செய்து கொண்டேயிருக்கிறது. மனம் அங்குமிங்குமாய் பதகளித்து ஓடிக்கொண்டு திரிந்தது.
இதுவரைக்கும் நான் எந்தவொரு பொருளையோ அல்லது ஒரு பென்ஸ் பணத்தையோ கூட அவனுக்குக் கொடுத்ததில்லை. ஒவ்வொரு நாளும் அவனைக் கடந்து சென்றபின் தவறாமல் வருந்துவேன்.
'இன்றைக்காவது நான் ஏதாவது அவனுக்குக் கொடுத்திருக்கலாமே...!'
அவனைக் கடந்து வந்த பின்னர் மனச்சோர்வோடு தான் எப்போதும் என் வேலை ஆரம்பிக்கும்.
பின்னர் மெல்ல மெல்ல அப்படியே மறந்து விடுவேன். இது தினமும் நடக்கும் வழக்கமான மனப் போராட்டம் தான்.
சக நண்பிகளிடம் என் மனக்குறையை அவ்வப்போது வெளிப்படுத்துவேன்.
அவர்கள் எல்லோரும் சொல்லும் ஒரு வார்த்தை:-
"மறந்து போயும் கொடுத்துக் காட்டாதே. பின்னர் தினமும் நீ கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இவர்கள் ஒரு குழுவாக இயங்குகிறார்கள் தெரியுமா? இதற்கு ஒரு தலைவனும் இருக்கிறான். அவன் தான் இவர்களை இப்படி பிச்சையெடுக்க விடுகிறான்..."
"இவர்கள் எங்களை விடப் பணக்காரர்கள் தெரியுமா? ஒரு நாளைக்கு இருந்த இடத்தில் ஐம்பது பவுண்களுக்கு மேல் பிச்சையெடுத்து உழைக்கிறார்கள்...."
ஆளுக்காள் இப்படியே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
வீட்டில் போய் ஒருநாள் என் மனக்குறையை சொன்னேன்.
"உந்தப் பிச்சைக்காரர்கள் எவ்வளவு பெரிய பணக்காரர்கள் தெரியுமா? பகலில் பிச்சையெடுக்கிறார்கள். இரவுகளில் பென்ஸ் காரில் திரிகிறார்கள்..."
அதற்குப் பின்னர் நான் யாருடனும் இதுபற்றி அதிகமாகப் பகிர்ந்து கொள்வதில்லை.
நான் இதுநாள்வரை எதையும் அவனுக்குக் கொடுத்ததில்லை என்றாலும் என் புன்னகையை மட்டும் மனசாரக் கொடுக்கத் தவறியதில்லை. அவனும் அதில் நிறைந்து போவது போல் தன் முகத்தை வைத்துக் கொண்டு சலாம் போட்டு என்னை வழியனுப்பி வைக்க மறந்ததில்லை.
இப்போ.... மூன்று நாட்களாக அந்த வாயிற்சுவரோரம் வெறுமையாக இருக்கிறது. அவனைக் காணவில்லை. சிலரிடம் விசாரி;த்துப் பார்த்தேன். யாரும் அக்கறையுடன் அதற்கு பதில் தருவதாக தோன்றவில்லை.
"பொலிஸ் பிடித்து அவனை நாடு கடத்தியிருக்கலாம்..."
"சுகவீனமாக இருக்கலாம்..."
மிகச் சாதாரணமாக வரும் இத்தகைய பதில்கள் என் மனநிலையை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக மேலும் சம்மட்டிகளால் தாக்குவது போல் அரள வைக்கிறது. யாரிடமும் இதுபற்றிப் பேசாமலிருப்பது உணர்வுகளுக்கு வசதியாகவும் இருக்கிறது.
அவனிருக்கும் அந்தச் சுவரோரத்தைப் தாண்டிப் போகிறேன்.
அது யாருமற்று வெறிச்சோடிப்போய் கிடக்கிறது- என் மனதைப் போல!!!
..................
-சந்திரா இரவீந்திரன்
10-05-2019.
Comments