ஞாபகங்கள் பேசும்
நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோயிலும் நானும்!
பருத்தித்துறை நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோயில் 'வெளிமடை' என்றால் அப்பா என்ன பாடுபட்டாவது கொழும்பிலிருந்து விடுமுறையெடுத்து ஊர் வந்து விடுவார். அக்காலங்களில் அவர் விரதமிருந்து நெல்லண்டை அம்மன் கோயிலின் முக்கிய வைபவங்களிற்கெல்லாம் எங்களையும் அழைத்துச் சென்று வருவது வழமை.
என் பதின்மவயதின் ஆரம்ப காலங்களான எழுபதுகளில் கோயில் திருவிழாக்கள், வெளிமடை, காய்மடை பூமடை போடுதல், வேள்வி, அன்னதானம், காவடி, கூத்து என எல்லாம் அங்கு சிறப்பாகவும் கோலாகலமாகவும் பெருந்திரளான பக்தர்களோடும் நடந்தேறும்.
இந்தக் கோயிலிலிருக்கும் அம்மனின் பெயரை எமது வீட்டில் உச்சரிக்காதவர்களே கிடையாது. குறிப்பாக இக்கோயில் என் தந்தையின் வழிவழி வந்த கோயில் என்று சொல்வார்கள். என் அப்பா அவரின் பெற்றோருக்குத் திருமணமாகி பத்துவருடங்கள் கழித்துத்தான் பிறந்தாராம். அதனைத் தொடர்ந்து அப்பாவுக்கு சிறுவயதில் காது குத்தியதிலிருந்து, சகல குடும்பக் காரியங்களிற்கும் நம்பிக்கையுடன் அவர்களால் வணங்கப்பட்ட தெய்வமாகவும், 'இத்திமரத்தாள்' எனச் செல்லமாக எல்லோராலும் அழைக்கப்பட்டவளுமான இந்த நெல்லண்டை அம்மனைப் பற்றி என் அப்பா பல கதைகள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
என் தாயார் வழிவழிவந்த குலதெய்வமான பருத்தித்துறை ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் எமது வீட்டிற்கு அருகிலேயே இருப்பதாலும், என் பாட்டாவும் பெத்தம்மாவும்(அம்மாவின் பெற்றோர்) இந்தக் கோயிலுக்கே நாளும் பொழுதும் சென்று வருவதாலும், பிள்ளையாரை நோக்கி விரதங்கள் அனுட்டிப்பதாலும் நாங்கள் அன்றாடம் வழிபடும் கோவில் ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலாகவே எப்பொழுதும் இருந்திருக்கிறது. ஆனாலும் எமது குடும்பத்தினரின் முக்கியமான பல நேர்த்திக்கடன்களும் வேண்டுதல்களும் தும்பளையிலிருக்கும் நெல்லண்டை அம்மனிடம் தான் ஒப்புவிக்கப்படுவது வழமை.
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதங்களில் 'ஆத்தியடிப்பிள்ளையார்' கோயிலிலிருந்து குறைந்தது ஆறு அல்லது ஏழு காவடிகளாவது நெல்லண்டை அம்மன் கோயில் நோக்கி நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப் போவது வழமை! அதே வேளை ஒவ்வொரு வருடமும் தவறாமல் தம்பசிட்டியிலிருக்கும் 'பண்டாரி அம்மன்' கோயில், மற்றும் ஹாட்லிக்கல்லூரியின் மாணவர்கள் விடுதியை அண்மித்திருக்கும் 'ஆலடிப்பிள்ளையார்' கோயில்களிருந்தும் பல காவடிகள் அதே நாளில் 'நெல்லண்டை அம்மன்' நோக்கிப் போவதுண்டு. போகிற போது இவை எல்லாம் ஒரு இடத்தில் சந்தித்து எல்லாக்காவடிகளும், பக்தர்களுமாகச் சேர்ந்து; நெல்லண்டை அம்மன் கோயிலை நோக்கிப் பயணிக்கத் தொடங்குவார்கள்.
எல்லாக் காவடிக்காரர்களுக்குமிடையில் அவரவர் திறமைக்கேற்ப ஆட்டத்தில் இரகசியமான ஒரு போட்டி இருந்துகொண்டேயிருக்கும். அவை பார்ப்பதற்கு அழகாகவும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவுமிருக்கும். எனக்கு காவடிக்காரரை விட்டுப் பிரிய மனம் வராது. நான் அவர்களுக்குப் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டு திரிவேன். அவர்களுக்கு செடில் குத்துவதிலிருந்து கடைசித் திருநீறு அடிக்கும் வரை அவர்களைவிட்டுப் பிரியவே மாட்டேன். ஒவ்வொரு வீதிகளாக அவர்கள் ஆடியாடி நகரும் போது, அவர்களுக்கு வாளிவாளியாக ஊற்றப்படும் தண்ணீரில் என் பட்டுப்பாவாடை சட்டையெல்லாம்; தெப்பமாக நனைந்துபோக, நான் பாவாடையைத் தூக்கிப்பிடித்தவாறே அவர்களுக்குப் பின்னால் ஓடியோடி நடப்பேன். என் பெத்தம்மா, அப்பாச்சி, பாட்டா எல்லோரும் 'இங்காலை வா... இங்காலை வா..' என்று கத்துவார்கள். நான் யார் சொல்லையும் காதில் வாங்காமல் போய்க்கொண்டேயிருப்பேன்.
காவடியோடு கற்பூரச்சட்டி, பாற்குடம் எடுப்பவர்களும் இணைந்தே செல்வார்கள். அவர்களைத் தொடர்ந்து கரகம், சதிராட்டம், தாளநடை என அவரவர் நேர்த்திக்கடன்களுக்கமைய ஒவ்வொரு கலைவடிவங்களையும் அந்தந்த இசைவாத்தியங்களோடு வீதிவீதியாக நிகழ்த்திச்செல்வது கண்கொள்ளாத காட்சிகளாக இருக்கும்! ஒவ்வொருவரும் அவரவர் ஆட்டத்திற்கேற்ப அணிந்திருக்கும் விதம்விதமான வர்ண உடைகள் ஒருபுறம், நாட்டுப்புற இசைக்கருவிகளான உடுக்கு, தாரைதப்பட்டை, பறைமேளம், நட்டுவ மேளம், நாதஸ்வரம், வெண்கலத்தாளம், சலங்கைஒலி ஒருபுறம்; அவற்றோடு இணைந்து உச்சஸ்தாயியில் குரலெடுத்துப் பாடிக்கொண்டு வரும் நாட்டுப்புறக்; கலைஞர்களின் சிந்துப்பாடல்கள் ஒருபுறம்; என கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமையும் அன்றைய பொழுது ஒரே அமர்க்களம் தான்!
தும்பளைச் சந்தியிலிருந்து நெல்லண்டை வீதி நீளத்திற்கும் சவுக்குமரங்களும், தோரணங்களும், வர்ண விளக்குகளுமாய் அலங்கரிக்கப்பட்டு, கோவில் வீதி ஒளிவெள்ளத்தில் மிதந்து கிடக்கும்;. வீதியெங்கும் தண்ணீர்ப்பந்தல், கடலைக்காரர், பலூன் விற்பவர்கள்;, ஐஸ்பழவண்டிகள், தும்புமிட்டாய் வண்டிகள்....என்று ஒரே ஆரவாரமாக இருக்கும். இரவைப் பகலாக்கி விட்டிருக்கும் அந்த அலங்காரங்களையும் ஆரவாரங்களையும் கண்டு களிப்பதற்காகவென்றே வேற்று ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து குவிந்துகொண்டிருப்பார்கள். அன்றைய பொழுது இருளறியா இந்திரலோகப் பொழுதாகத் திளைத்துக்கிடக்கும்;!
1981ல் எங்களது குடும்ப நேர்த்தி ஒன்றிற்காக என் சின்ணண்ணாவும் (பார்த்திபன்), தம்பி பரதனும்(மொறிஸ்) ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலிலிருந்து நெல்லண்டை அம்மன் கோவில் வரைக்கும் காவடி எடுத்திருந்தார்கள். அப்போது என் சின்னண்ணா நெற்றியிலிருந்து காற்பாதங்கள் வரை உடல் முழுவதும் வெள்ளியாலான முட்செடில்கள் குற்றி, வாய்க்கும் அலகு குற்றிக் காவடி எடுத்திருந்தார். நாமெல்லோரும் காவடியோடு சேர்ந்து செல்லும் போது எனக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு கிடந்தது. சின்னண்ணா, நெல்லண்டை அம்மன் கோவில் சேர்ந்து, காவடியை இறக்கி வைக்கும் வரை என் மனது ஒருநிலையின்றித் தவித்துக்கொண்டேயிருந்ததை இப்பவும் மறக்கமுடியவில்லை.
தம்பி அப்போது பன்னிரண்டு வயதுச் சிறுவன். அவனும் வாய்க்கு அலகு குற்றிக் காவடி எடுத்திருந்தான். இருவருமே முழுநாளும் விரமிருந்து ஆத்தியடிப்பிள்ளையார் கோவிலிலிருந்து நெல்லண்டை வரை பறைமேளங்களின் தாள இசையோடு, சளைக்காமல் காவடியாட்டம் ஆடிப்போனது இன்றைக்கும் என் கண்களுக்குள் காட்சியாகப் பதிந்து கிடக்கிறது.
வழமையாக ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலிருந்து கந்தவனம் (முருகேசு) மாமா, குழந்தை மாமா, தேவசகாயம் மாமா என அப்போது ஊரில் இளைஞர்களாக இருந்த பலரும் காவடி எடுப்பாhர்களானாலும், ஒவ்வொரு வருடமும் தவறாமல் காவடி எடுப்பவர் ஆத்தியடியிலிருக்கும் சுந்தரிப்பாட்டியின் மகன் மனோகரண்ணை தான்! மனோகரண்ணை அப்பொழுது கொழும்பில் படித்துக்கொண்டிருந்தார். முழுநாளும் கடும் விரதமிருந்து காவடி எடுப்பார். சுந்தரிப்பாட்டி பாற்செம்பு எடுப்பா. பாற்செம்பு தலையில் ஏறியதும் அவவிற்கு இடுப்பைச் சுற்றி ஒரு வேஷ்டித்துணியைக் கட்டிவிடுவார்கள். அவவை இழுத்துப் பிடித்துச் சமாளிப்பதற்கென்றே இரண்டு மூன்று பெண்கள் அவவைச் சுற்றித் தயாராக இருப்பார்கள்! காவடிக்குரிய பறைமேளங்கள் ஆட்களை உசுப்பேற்றுவது போல் அதற்கேயுரிய லயத்தோடு ஒலிக்கத்தொடங்க, காவடிக்காரர்கள் உருக்கொண்டு மெல்ல மெல்ல அசையத்தொடங்குவார்கள். அவர்களின் முதுகில் இருபுறமும் வரிசையாகக் கொழுவியிருக்கும் வெள்ளி முட்களில் தொங்கும் கயிறுகளை இழுத்துப் பிடித்து அவர்களது ஆட்டத்திற்கு இசைவாக அவற்றை அசைப்பதற்கு ஒவ்வொரு இளைஞர்களும் வேஷ்டிகளை மடித்துக்கட்டித் தயாராக இருப்பார்கள். காவடி எடுத்திருப்பவர்கள்; களைக்காமல் ஆடுவதற்கும், அவர்களின் உடலைக் குளிர்விப்பதற்கும், போகிற வழிகளிலிருக்கும் வீட்டுக்காரர்கள் வாளிகளில் தண்ணீர் நிரப்பி, வீட்டுவாயிலில் வைத்துக் காத்துக்கொண்டு நிற்பார்கள்.
அவர்கள் அசையத்தொடங்க, சுந்தரிப்பாட்டி பாற்செம்புடன் உரு ஆடத்தொடங்கிவிடுவார். தலையிலிருக்கும் அவரது பாற்செம்பிலிருந்து பால் ததும்பி அவரின் முகமெல்லாம் வழியத் தொடங்கிவிடும். ஒரு கட்டத்தில் அவவின் சிவந்த அழகான முகம் சந்தனம் குங்குமம் எல்லாம் கலந்த வர்ண முகமாகிவிடும்.
காவடியாட்டம் சூடுபிடிக்க, நெல்லண்டைப் பத்திரகாளி கோயிலுக்குப் போகும் பக்கமாக இழுத்துக்கொண்டு சுந்தரிப்பாட்டி பாற்செம்புடன் ஓடத்தொடங்கிவிடுவார். அவவின் இடுப்பில் சுற்றியிருக்கும் வேஷ்டித்துணியை இழுத்துப் பிடிப்பவர்களும் கண்மண் தெரியாமல் அவவின் பின்னால் ஓடவேண்டிய நிலை வந்துவிடும்;. அவரை காவடியோடு சேர்த்து இழுத்து வைத்து அழைத்துச் செல்வதற்காக பெண்கள் சிலர்; படாதபாடு பட்டுக்கொண்டிருப்பார்கள்.
கந்தவனம் மாமா ஒரு கால் இயலாத போதும், பல சமயங்களில் பிள்ளையார் கோவில் வீதியை முழங்கால்களால் நடந்து காவடியுடன் வலம்வருவதைப் பார்த்து, நான் பல சமயங்களில் கண் கலங்கியிருக்கிறேன். காவடிகள் ஆத்தியடிப்பிள்ளையார் கோவில் உள்வீதி, வெளிவீதிகளை வலம்வந்து முன்னாலிருக்கும் வெள்ள வாய்க்காலைக் கடந்து, விநாயகமுதலியார் வீதியையும் கடந்து, பூதராயர் ஒழுங்கையினூடாக பருத்தித்துறை பிரதான வீதியேறி, சிவன் கோவிலை தரிசித்து, தும்பளை வழியாக வரும் சிறுசிறு கோவில்களையெல்லாம் தரிசித்து காவடிகள் நகர்ந்து செல்லும். ஒவ்வொரு சந்திகளிலும் அவர்களின் ஆட்டம் தனி.
இவை தவிர நெல்லண்டை கோவிலில் வருடா வருடம்; வெளிமடை, வேள்வி, அன்னதானம் இவற்றோடு எனக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்வும் நடக்கும். அது மேடைக்கூத்து. பருத்தித்துறை நகரிலிருக்கும் எல்லாக் கோயில்களிலும் 'கூத்து' நடப்பதாக எனக்கு ஞாபகம் இல்லை. சில குறிப்பிட்ட கோயில்களில் மட்டுமே அந்நிகழ்வு நடப்பதுண்டு. பருத்தித்துறை அவ்வோலைப்பிள்ளையார் கோவிலில் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு சமயம் ஒலிபெருக்கியில் காத்தவராயன் கூத்து நடைபெறும் ஓசை கேட்ட போது, நான் பெத்தம்மாவிடம் போய் என்னை அந்தக் கோவிலுக்கு அழைத்துச் செல்லும்படி கெஞ்சிக் கூத்தாடி ஒரு நள்ளிரவில் குச்சி ஓழுங்கைகள் ஊடாக அங்கு போனது ஞாபகம். அது எண்பதுகளின் ஆரம்பகாலம் என்று நினைக்கிறேன். நான் அப்போது குமர்ப்பெண் என்பதால் பெத்தம்மாவுக்கு என்னை அங்கு நீண்ட நேரம் நின்று கூத்தைப் பார்க்கவிடுவதில் அவ்வளவாக இஷ்டமில்லை. என் வயது இளம்பெண்கள் எவரும் அப்போது எங்கள் ஊரிலிருந்து கூத்துப் பார்ப்பதற்காகவென்று அடம்பிடித்து, இரவுப்பொழுதுகளில் கோவிலுக்குப் போனதாகவும் நானறியவில்லை. ஆனால் எந்தக்காரணங்களிற்காகவும் என்னால் அவற்றைப் பார்க்காமல் இருக்க முடிவதுமில்லை.
அன்று சனங்களால் நிறைந்திருந்த 'அவ்வோலைப் பிள்ளையார்' கோயில் வீதியில், என்னை இருக்க விடாமல், வலும் தூரத்தில் நின்றபடியே ஒரு அரைமணிநேரம் மட்டும் பார்க்க அனுமதி தந்துவிட்டு, பெத்தம்மா என்னை இழுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டார். அந்தக் கோயிலுக்கு, எங்கள் ஊரவர்களோ உறவினர்களோ ஒருபோதும் செல்வது கிடையாது. அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் வழிபடும் ஒரு கோயிலாக அப்போது இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அந்தக் கோயிலில் நல்ல நிகழ்வுகள் நடக்கும் போது அவற்றைப் பார்க்க முடியாமல் இருக்கிறதே என்று நான் உள்ளுரப் பலசமயங்களில் வருத்தப்பட்டிருக்கிறேன்;.
ஆனாலும் 'கூத்து' என்றாலே என் நினைவுக்கு வருவது பருத்தித்துறை 'நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன்' கோவில் தான்!
வருடா வருடம் நெல்லண்டையில் நடைபெறும் 'கூத்து' நிகழ்வைப் பார்ப்பதற்காக என் அப்பாச்சி (இலட்சுமிப்பிள்ளை) ஆத்தியடியிலிருந்து மூன்று மைல்கள் தூரம் வரை நடந்து, அம்மன் கோவிலுக்குப் போவார். போகும்போது அரிக்கன் விளக்கு, ஓலைப்பாய், கச்சான், கடலை, கோப்பி எல்லாம் கட்டிக்காவிக்கொண்டு புறப்படுவார். எனக்குக் கூத்து பார்ப்பதில் மகா ஆர்வம் என்பது அவவுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் என்னை மறக்காமல் தன்னோடு அழைத்துச் செல்வார். போகிற வழிக்கு 'ரோச் லைற்' அல்லது அரிக்கன் விளக்கைப் பிடித்துக்கொண்டு போவது நானாகத்தான் இருக்கும். அங்கு நடைபெறும் கூத்துகளில்; காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திர மயான காண்டம்.....போன்றவை இன்னமும் என் ஞாபகத்தில் இருப்பவை. அதில் நடித்த சில கூத்துக்கலைஞர்களின் முகபாவங்கள் கூட, இப்போதும் என் ஞாபகத்தில் இருக்கின்றன!
நெல்லண்டையில் நடைபெறும் 'வெளிமடை' ஒரு பிரபல்யமான வைபவம். ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் வரும் வெளிமடைக்காக வாழைக்குலை, இளநீர், பலாப்பழம் ஆகியவற்றை அப்பா வருடாவருடம் சுமந்து சென்று கொடுத்துவிடுவார்!
'வேள்வி' இப்போ அங்கு நடைபெறுவதில்லை என்று அறிகிறேன். முன்பு வேள்வி நடைபெறும் போது அந்தப்பகுதிக்கு அப்பா எங்களைப் போக அனுமதிக்க மாட்டார். அப்படியிருந்தும் கோவிலின் மேற்கு வீதியில் நீளத்திற்கு இருவரிசைகளாகக் கட்டப்பட்டிருக்கும் தடித்த கயிறுகளில் பிணைத்திருக்கும் கொழுகொழுவென்ற கடா ஆடுகளையும், கொண்டை சிலிர்த்து நிற்கும் சேவல்களையும் பரபரப்போடு தூரத்தில் நின்று பார்த்திருக்கிறேன். பார்க்கும் போதே உடல் புல்லரிக்கும். வெயில் வெளிச்சத்தில் அவையெல்லாம் மினுமினுவென்று அத்தனை அழகாக இருக்கும். அன்றைய நாளுக்குப் பிறகு அவற்றை மீண்டும் நான் பார்க்க முடியாதே என்று நினைக்கும் போது நெஞ்சுக்குள் துயரமும் வெப்பியாரமும் நிறைந்து முட்டும்! அவற்றில் சிலவற்றை பேரம்பேசி விலைதீர்த்து வாங்கிக்கொண்டு போவதற்காகவும் வியாபாரிகள் பலர் அங்கு திரண்டிருப்பார்கள். இப்போது அப்படியொரு சடங்கு அங்கு இல்லாமல் போனமை என்பது மனதிற்குப் பெரும் ஆறுதலாக இருக்;கிறது.
கடைசியாக 2016ம் ஆண்டில் லண்டனிலிருந்து இலங்கை சென்றிருந்த போது, நெல்லண்டை அம்மன் கோவிலுக்கும் போனோம். அதே சித்திரை மாதம். கொளுத்தியெரியும் வெயில். பூசை முடிய அன்னதானம். எங்கள் இளையமாமா வேல்முருகு அவர்களின் உபயம் அன்று. என்னையும் கணவரையும் சிறப்பு விருந்தினர் போல் அழைத்துச் சென்றார்;. குத்தரிசிச்சோறும்; மரக்கறிகளும் சேர்த்துச் சமைத்த அன்னதானப்படையலின் முன்னால் கொண்டு போய் எங்களை அமர்த்தினார். சுடச்சுடப் பரிமாறப்பட்ட அன்னதானப் படையல் அந்நேரப் பசிக்கு அமிர்தம் போலிருந்தது.
அந்த நாள் எனக்குப் பழைய நெல்லண்டை அன்னதான வைபவங்களை அடுக்கடுக்காக ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது. அது சந்தோசங்கள் நிறைந்திருந்த எண்பதுகளிற்கு முற்பட்ட காலம் என்பதாலோ என்னவோ அது வேறு சுவை, வேறு மணம், வேறு சுகம்!
அப்போது அன்னதானம் என்றால் சனதிரள் சொல்லி மாளாது. எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் தத்தமது மண்ணில் விளைந்த மரக்கறிகளை கொண்டு வந்து தானமாக வழங்குவார்கள். வாழைக்குலை, பலாப்பழங்கள், வீட்டில் உறை போட்ட தயிர், முக்கியமாக கத்தரிக்காய், பயிற்றங்காய், பூசணிக்காய், வாழைக்காய், பாவற்காய், தேங்காய், மிளகாய், வெங்காயம், பப்படம், வடாகம்;, மோர் மிளகாய் என எல்லாம் ஊர் மக்களின் சொந்தத் தயாரிப்பாக வந்து குவிந்திருக்கும். சமையல் தொடங்கு முன்பே பச்சை மரக்கறிகளின் வாசனை ஊரை நிறைத்துவிடும். சமையலின் பின் வரும் வாசனை அது வேறு! அதற்கு வார்த்தைகள் கிடையாது!
அந்தப் பழைய நாட்களின் ஞாபகங்கள் நெஞ்சிற்குள் விரியும் போதெல்லாம் மனதை நிறைப்பது மகிழ்ச்சி மட்டுமில்லை, தீராத ஏக்கமும் தான்!
இனியொருகாலமும் காட்சிகளும் அப்படி வரவேவராது என்று தெரியும். ஆனால் மீண்டும் எத்தனை தடவைகள் அந்த மண்ணிற்குப் போனாலும் நெல்லண்டை அம்மாள்; அதே மிடு;க்கோடு அப்படியே தான் இருப்பாள்;. கோவிலும், வீதியும் அதே இடத்தில் அப்படியே தான் இருக்கும்.
ஆனாலும் அல்லும் பகலும் நானங்கு கண்ட மனிதர்கள், அந்த ஓசை, அந்த வாசனை நிரம்பிய காற்று, கோவில் வீதியெங்கும் பக்திப்பரவசத்துடன் நடந்து திரிந்த என் அப்பா, என் அப்பாச்சி, என் அண்ணாக்கள், என் தம்பிகள், என் உறவுகள், அந்தக் காவடிக்காரர்;, கரகக்காரர், கூத்துக்காரர், உடலை முறுக்கி மேளமடிக்கும் அந்த மேளகாரர், மூச்சைப் பிடித்து காற்றில் இனிய நாதத்தைப் பரப்பும் நாதஸ்வரக்காரர், தணலடுப்பின் முன்னால் அமர்ந்திருந்து சுடச்சுடக் கடலை வறுத்துக்கொண்டிருக்கும் கடலைக்காரர், கண்ணாடிப்பெட்டியொன்றை சைக்கிளில் பொருத்திவிட்டு, சிறிய மணியொலிக்க, வீதியெல்லாம் நடந்து திரியும்; தும்புமிட்டாய்க்காரர், விதம்விதமான வடிவங்களில் பலூன்களை ஊதிக்கட்டிவிட்ட தடியொன்றை தலைக்கு மேலே உயர்த்தியபடி சுமந்து திரியும் பலூன் வியாபாரிகள் என அவர்களெல்லாம் மீளவும் அங்கு வருவார்களா?
அம்மாள் மட்டும் அதே மிடுக்கோடு, யாருக்கும் புரியாத அதே புன்னகையோடு, அதே மூலஸ்தானத்தில் அப்படியே அழகுச்சுடராய் எழுந்தருளி நிற்பாள்! ஆனால் வேறு மனிதர்கள், வேறு குரல்கள், வேறு ஓசை, வேறு வாசனைகளோடு...!!
--------
சந்திரா இரவீந்திரன்
லண்டன்
(லண்டனிலிருந்து வெளியாகும் 'சிறுகதை மஞ்சரி' (வைகாசி இதழ் 10 - 2021) சஞ்சிகையில் பிரசுரமானது.)
Comments
எனக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில்தான் நினைவில் இருக்கிறது. அற்புதமான பதிவு
S MurarI